முரசொலி தலையங்கம்

"மழைக்காலத்தில் மக்களைக் காக்கும் குடையாகத் திகழும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்": முரசொலி புகழாரம்!

மழைக்காலத்தில் மக்களைக் காக்கும்குடையாக இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

"மழைக்காலத்தில் மக்களைக் காக்கும் குடையாகத் திகழும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்": முரசொலி புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மக்களுக்கு ஒரு துன்ப துயரம் ஏற்பட்டால் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சி எப்படிச் செயல்படும் என்பதற்கு சமீபத்திய உதாரணம்தான், கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யத் தொடங்கப்பட்ட ‘ஒன்றிணைவோம் வா' என்ற திட்டமாகும்!

மக்களுக்கு ஒரு பாதிப்பு வரப் போகிறது என்றால் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி எப்படி துரிதமாகச் செயல்படும் என்பதற்கு உதாரணம்தான், செங்குன்றம் ஏரி உடையப் போகிறது என்றதும் எடுத்த நடவடிக்கைகள் ஆகும்!

அ.தி.மு.க. ஆட்சியும் கட்சியும் இதற்கு முற்றிலும் நேர்மாறானது என்பதற்கு உதாரணம்தான், செம்பரம்பாக்கம் ஏரியைத் திறக்க வேண்டிய நேரத்தில் திறக்காமல், அதன்பிறகு திறந்து வைத்து சென்னை மக்களையே வெள்ளத்தில் மூழ்கவைத்த ஆட்சியை நடத்தியவர் ஜெயலலிதா. அம்மா வழியில் ஆட்சி நடத்திய பழனிசாமியும் அப்படித்தான் நடந்து கொள்வார். எங்கே மக்கள் பாதிக்கப்பட்டாலும் எட்டிப்பார்க்காத பழனிசாமி அவர்!

ஜெயலலிதா ஆட்சிக் காலத்து செம்பரம்பாக்கத்தையும் - கலைஞர் ஆட்சிக் காலத்து செங்குன்றத்தையும் சென்னை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். செம்பரம்பாக்கத்தைத் திறந்து விட வேண்டும் என்பதை முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் சொல்லி அனுமதி வாங்கக் கூட அதிகாரிகள் இரண்டு நாட்கள் காத்திருந்தார்கள். இரண்டு நாட்கள் கழித்து அளவுக்கு அதிகமாகத் திறந்து விடும் சூழலால் சென்னை மிதந்தது. மக்களை தண்ணீரில் மூழ்கடித்த பிறகும் சப்பைக் கட்டுக் கட்டினார் முதலமைச்சர் ஜெயலலிதா. இதில் என்ன கொடுமை என்றால் அ.தி.மு.க.பொதுக்குழுவில் கூட அதிகமான நேரம் இதற்கு விளக்கம் அளித்தார். என்ன காரணம் என்றால், ஜெயலலிதா மீது அவரது கட்சிக்காரர்களே கோபமாகப் பேசிக் கொண்டு இருப்பதாக அன்றைய உளவுத்துறை அதிகாரிகள் அறிக்கை கொடுத்தார்கள்.

“செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விட காலதாமதம் ஏற்பட்டதுதான் சென்னை வெள்ளத்தில் மூழ்கக் காரணம் என்று எதிர்க்கட்சிகள் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றன. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் விளக்கமாக அறிக்கை கொடுத்த பின்னரும், மீண்டும் மீண்டும் ஒரே பொய்யை திரும்பத் திரும்ப எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. மழைக் காலங்களில் ஏரிகளில் நீர் அளவு எவ்வாறு பராமரிக்கப்பட வேண்டும் என்பது பற்றி ‘வெள்ளநீர் ஒழுங்கு விதிமுறைகள்’ என்பதில் மிகத்தெளிவாக உள்ளது. இது நன்றாகத் தெரிந்தும், வேண்டுமென்றே தி.மு.க.வினர் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர். இது பற்றி எதிர்க்கட்சியினருக்கு புரியவில்லை என்றால் 8-ம் வகுப்பு கணிதப் பாடத்தில் உள்ள ‘காலம் மற்றும் வேலை' பற்றிய கணக்குகளைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்” என்று கொக்கரித்தார்.

அவருக்குத்தான் காலமும் நேரமும் கடமையும் தெரியவில்லை. தெரிந்தே செய்யப்பட்ட தவறு அது! அத்தகைய அ.தி.மு.க.வின் பழனிசாமியும் பன்னீர்செல்வமும் இன்று தி.மு.க.வுக்கு அறிவுரை சொல்லக் கிளம்பி இருக்கிறார்கள். தனது ஆட்சிக் காலத்தில் மக்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டதும் எங்கே போய் பார்த்தார் பழனிசாமி?

இதோ தி.மு.க. என்ற கட்சி எத்தகையது என்பதற்கு இதோ செங்குன்றம் உதாரணம் ஒன்று போதும். திருவள்ளூரில் நடந்த 'தமிழகம் மீட்போம்' சிறப்புக் கூட்டத்தில் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அந்தக் காட்சியை விவரிக்கிறார்கள்...

“நான் நினைத்துப் பார்க்கிறேன்... அந்த நாளை நினைத்தால் இப்போது கூட பதற்றமாக இருக்கிறது. உடல் லேசாக நடுங்குகிறது! செங்குன்றம் ஏரியில் உடைப்பு ஏற்பட்டு சென்னைக்கே ஏற்பட இருந்த பாதிப்பை முதல்வர் கலைஞர் அவர்கள் எப்படித் தடுத்தார் என்பது கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு நினைவில் இருக்கும்!

31.3.1999 அன்று நள்ளிரவு. முதல்வர் கலைஞர் அவர்கள் கோபாலபுரம் வீட்டில் தூங்கிக் கொண்டு இருக்கிறார். மறுநாள் சேலம் சென்று ஒரு தொழிற்சாலைத் திறப்புவிழாவில் பங்கெடுக்க வேண்டும். திடீரென்று நள்ளிரவில் முதல்வர் கலைஞர் அவர்களைச் சந்திக்க புலனாய்வுத் துறை ஐ.ஜி. வருகிறார். மிக அவசரமான சூழல், அதனால் முதலமைச்சரைச் சந்திக்க வேண்டும் என்கிறார். உடனே கலைஞர் அவர்களை எழுப்புகிறார்கள். அந்த ஐ.ஜி. சொன்னதைக் கேட்டதும் முதல்வர் கலைஞர் அவர்கள் நடுங்கிப்போய் விடுகிறார்கள். செங்குன்றம் ஏரி உடையப் போகிறது, அது உடைந்தால் சென்னையும் சுற்றுப் பகுதியும் மூழ்கும் அபாயம் ஏற்படும் என்று சொல்கிறார் அந்த அதிகாரி.

உடனே அரசாங்க இயந்திரம் அனைத்தையும் தட்டி எழுப்பினார். தாழ்வான பகுதியில் இருக்கும் மக்கள் அனைவரும் மேடான பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அன்றைக்கு நான் சென்னை மேயராக இருந்தேன். மாநகராட்சி நிர்வாகத்தை முழுமையாக இறக்கி விட்டோம். அந்த நள்ளிரவில் கோட்டைக்குப் புறப்பட்டு விட்டார் முதல்வர் கலைஞர். அவரோடு நானும் சென்றேன். அனைவரையும்

அங்கே வரச் சொல்லி விட்டார்.

பாதி அமைச்சரவை கோட்டைக்கு வந்துவிட்டது. அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சோ.பாலகிருஷ்ணன் அவர்கள். அவரையும் கோட்டைக்கு முதல்வர் கலைஞர் அழைத்தார்.

உடைப்பு ஏற்பட்ட இடத்துக்கு அமைச்சர் சுந்தரத்தை அனுப்பி அங்கிருந்து தகவல் சொல்லிக் கொண்டே இருக்கச் சொன்னார்.

30 அடி ஆழம் - 20 அடி அகலத்துக்கு ஏரியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஏரியின் மொத்தக் கொள்ளளவு அளவுக்கு தண்ணீர் இருந்தது. ஏற்கனவே அந்தப் பகுதியைச் சேர்ந்த காவாங்குளம், கொளத்தூர், லட்சுமிபுரம், தணிகாசலம் நகர், கொடுங்கையூர் ஆகிய பகுதிக்கு நமது அரசு எச்சரிக்கை செய்திருந்தாலும் இந்த உடைப்பு எதிர்பாராதது.

இராணுவமும் தயார் நிலையில் வைக்கப்பட்டது. அதிகாலையில் ஓரளவு நிலைமை சீரடையத் தொடங்கியதும், செங்குன்றம் போகலாம் என்று முதல்வர் கலைஞர் சொல்லிவிட்டார்கள். நானும் அவரோடு தயாராகி நிற்கிறேன்.

ஆனால் காவல்துறை உயரதிகாரிகள் நீங்கள் செல்ல வேண்டாம் என்று சொன்னார்கள். அதைக் கேட்கவில்லை கலைஞர் அவர்கள்.

அங்கே போய் பார்த்தே ஆகவேண்டும் என்று கலைஞர் அவர்கள் சொன்னார்கள். அவரோடு நாங்களும் சென்றோம். நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது, மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை தனது கண்ணால் பார்த்த பிறகுதான் முதல்வர் கலைஞர் அவர்கள் அமைதியானார்கள். இதுதான் கலைஞர்!

அதிகாலையில் கோட்டைக்கு வருகிறார் முதல்வர் கலைஞர் அவர்கள்.

லிப்ட் ஆபரேட்டர்கள் இல்லாததால் லிப்ட் இயங்கவில்லை. படியில் ஏறினார். அந்த ஐந்தாறு மணி நேரமும் காபியோ, தண்ணீரோ கூட குடிக்கவில்லை.

இதுதான் கலைஞர்.

இவர் தான் நம்முடைய தலைவர்.

ஒரு சம்பவம் நடந்ததும் உடனே அந்த இடத்துக்குப் போய்விட வேண்டும், மக்களைப் பார்க்க வேண்டும், மக்களோடு நாமும் இருக்க வேண்டும்,

அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்று என் மனம் துடிக்கிறது என்றால் அதற்குக் காரணம் கலைஞர் ஊட்டிய உணர்வு. அவர் உருவாக்கியமனிதாபிமானம், மக்கள் பற்று.” என்று வர்ணித்தார் மரியாதைக்குரிய மு.க.ஸ்டாலின் அவர்கள். எதிர்க்கட்சியில் இருந்தபோது சொன்னார். இதோ,இப்போது ஆளும்கட்சியாக ஆனபிறகும் செய்து கொண்டு இருக்கிறார்முதலமைச்சராக!

ஆட்சியின் குறியீடுகளில் ஒன்று வெண்கொற்றக் குடை! இதோ மழைக்காலத்தில் மக்களைக் காக்கும்குடையாக இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

banner

Related Stories

Related Stories