தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் தென்காசி மற்றும் மதுரை மாவட்டங்களில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று இரவு தென்காசி மாவட்டத்திற்கு இரயிலில் மூலம் பயணம் மேற்கொண்டார்.
இதற்காக சென்னை எழும்பூர் இரயில் நிலையத்திலிருந்து இரவு 8.40 மணிக்கு புறப்படும் பொதிகை ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்மூலம் முன்னாள் முதல்வர் கலைஞருக்கு பின்னர் இரயிலில் பயணம் மேற்கொள்ளும் முதல் தமிழ்நாடு முதலமைச்சராக திகழ்ந்துள்ளார்.
முதல்வர் இரயிலில் பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் முதல்வருக்கு அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், உட்பட கட்சி நிர்வாகிகள் திரளானோர் கூடி முதல்வரை வரவேற்றனர்.
முதல்வரின் இந்த பயணத்துக்காக பொதிகை ரயிலின் இறுதியில் சிறப்புப்பெட்டி ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 7.30 மணிக்கு தென்காசி சென்றடையும் முதலமைச்சர் பின்னர் குற்றாலத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கவுள்ளார்.
தொடர்ந்து அங்கு முடிவடைந்த பணிகளை தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் தமிழக முதல்வர் பின்னர் அங்கு 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.