மு.க.ஸ்டாலின்

“களங்களில் வெற்றியைக் குவித்து கலைஞரின் கால்மலரில் காணிக்கையாக்கிடுவோம்” - மு.க.ஸ்டாலின் மடல்!

கலைஞர் நினைவுநாள் அமைதிப் பேரணிக்கும், திருவுருவச் சிலை திறப்பு நிகழ்விற்கும் உடன்பிறப்புகளுக்கு அழைப்பு விடுத்து மடல் வரைந்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

“களங்களில் வெற்றியைக் குவித்து கலைஞரின் கால்மலரில் காணிக்கையாக்கிடுவோம்” - மு.க.ஸ்டாலின் மடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஆகஸ்ட் 7ம் தேதி நடைபெறவிருக்கும் கலைஞர் நினைவுநாள் அமைதிப் பேரணிக்கும், திருவுருவச் சிலை திறப்பு நிகழ்விற்கும் உடன்பிறப்புகளுக்கு அழைப்பு விடுத்து மடல் வரைந்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

உடன்பிறப்புகளில் ‘உங்களில் ஒருவன்’ எனக் குறிப்பிட்டு அவர் எழுதியுள்ள மடல் பின்வருமாறு :
“உண்மைப் பாசத்தையும், உயர் திராவிட இலட்சியத்தையும், ஒருங்கிணைத்து உயிரைத் தட்டி எழுப்பும், ‘உடன்பிறப்பே’ என்கிற ஒற்றைச் சொல்லால், ஒட்டுமொத்த தமிழினத்தையும், உணர்வு சாகரத்தில் கட்டிப்போட்ட, பேராற்றல் மிக்க பெருமைமிகு ஆளுமையாம் தலைவர் கலைஞர் அவர்கள் நம்மிடையே இல்லை என்பதை நம்பிட நமது மனது மறுக்கிறது. இயற்கையின் இயல்பான சதியால் அவர் நம்மிடமிருந்து பிரிக்கப்பட்டாலும், இதயத்தில் என்றும் நீக்கமற நிறைந்தே இருக்கிறார். இமைப்பொழுதும் அவரது நினைவுகள் நமைவிட்டு அகலுவதே இல்லை.

இதயத்தின் இடைவிடாத துடிப்பாக, ஓய்வின்றி உயிரை இயக்கும் மூச்சாக, குருதியில் இரண்டறக் கலந்துவிட்ட உணர்வாக, எந்நாளும் கொள்கை வழி நம்மை இயங்கிட வைக்கும் இணையிலாத உயிராற்றலாக விளங்குகிறார் தலைவர் கலைஞர். நம் எண்ணங்களிலிருந்து அவர் வேறெங்கும் பிரிந்து செல்லவில்லை. நம் நெஞ்சங்களிலிருந்து அவர் கணப்போதும் நீங்கவில்லை. வாழ்கிறார்.. மேலும் சிறந்து வளர்ந்து வாழ்கிறார்.. என்றென்றும் நம்முடன் இணைந்தே வாழ்கிறார் என்ற எண்ணமே, நம்முடைய துன்பத்தைத் துடைத்து-அயர்வின்றி அனுதினமும் இயங்க வைக்கிறது.

“களங்களில் வெற்றியைக் குவித்து கலைஞரின் கால்மலரில் காணிக்கையாக்கிடுவோம்” - மு.க.ஸ்டாலின் மடல்!

94 வயது வரை சலிப்பே இன்றி சதாகாலமும் உழைத்துத் தனி சரித்திரம் படைத்திருக்கும் அந்த மகத்தான தலைவருக்குச் செலுத்தும் உண்மையான மரியாதை என்பது, அவர் உயிர் எனப் போற்றி வளர்த்த திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மகத்தான இந்த மக்கள் இயக்கத்தை, அவர் வரையறுத்துத் தந்த இலட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிக்கச் செய்து, களங்களில் எஃகைப் போன்ற உறுதியுடன் நின்று, ஒப்பற்ற வெற்றிகளைப் பெற்று அவருடைய காலடிகளில் காணிக்கையாக்குவதுதான். அதைத்தான் நாம் தலையாய கடமையாக மேற்கொண்டு வருகிறோம்.

உங்களில் ஒருவனான எனக்கு கழகத்தின் தலைவர் என்ற பொறுப்பினைத் தந்து, தலைவர் கலைஞர் கட்டிக் காத்த பேரியக்கத்தை வழிநடத்தும் பெரும் பொறுப்பை ஏற்றி வைத்துள்ள நிலையில், அவரது அன்பு உடன்பிறப்புகளாம் உங்களின் ஒத்துழைப்புடன் அந்த வெற்றிப் பயணத்தை மேற்கொண்டுள்ளேன். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கழகமும் தோழமைக் கட்சிகளும் பெற்ற சிறப்பான வெற்றி யினை இந்தியாவே திரும்பிப் பார்த்தது. அது, மக்கள் நம் தலைவர் கலைஞருக்குத் தந்த மறக்க முடியாத நினைவுப் பரிசு.

அதனால்தான் அதனை, தலைவர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் நாம் காணிக்கையாகச் செலுத்தினோம்.
கழகத்தின் தலைவர் என்ற முறையில் நானோ, கழகத்தின் மற்ற முன்னணி நிர்வாகிகளோ, மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களோ மட்டும் நினைவிடம் செல்வதில்லை. தமிழ்நாட்டின் பல திசைகளில் இருந்தும் சென்னைக்கு வரும் கழகத் தொண்டர்கள், உலகின் பல நாடுகளிலிருந்தும் வருகிற உணர்வுமிக்க தமிழர்கள், குடும்பம் குடும்பமாகக் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் என எல்லோருமே தலைவர் கலைஞர் அவர்கள் ஓய்வு கொள்ளும் அவரது நிரந்தரத் துயிலுமிடத்தைக் காண்பதற்கும், உள்ளத்திலிருந்து ஊற்றெடுத்துக் கொட்டும் கண்ணீரைக் காணிக்கையாக்குவதற்கும் சாரை சாரையாக வருவதை நாள்தோறும் காண முடிகிறது.

“களங்களில் வெற்றியைக் குவித்து கலைஞரின் கால்மலரில் காணிக்கையாக்கிடுவோம்” - மு.க.ஸ்டாலின் மடல்!


இயற்கையின் விதிப்படி இறந்திருந்தாலும், எல்லோரது இதயங்களிலும் இன்றும் நிறைந்து வாழ்கிறார் நம் தலைவர் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் வேறென்ன இருக்க முடியும்? நெஞ்சத்தில் அரியாசனம் போட்டு அமர்ந்திருக்கும் அன்புத் தலைவரின் முதலாவது ஆண்டு நினைவு தினம், ஆகஸ்ட் 7 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த நாள்தானே, சென்னை-காவேரி மருத்துவமனை வாசலில் வாரக் கணக்கில் கூடி நின்ற தொண்டர்களும் பொதுமக்களும், “எழுந்து வா தலைவா.. எழுந்து வா..” என தலைவர் கலைஞர் சிகிச்சை பெற்று வந்த நான்காவது மாடிக்கே எதிரொலிக்கும் வகையில் எழுப்பிய முழக்கங்கள், தேம்பி அழுத ஒலியாக மாறிய நாள். எழுந்து வந்துவிடுவார் என்ற நம்பிக்கை முழக்கங்கள் தேய்ந்து, அல்லல்பட்டு ஆற்றாத கண்ணீர்க் குரல்கள் ஒலிக்கத் தொடங்கிய நாள்.

அந்த வேதனை நினைவுகளையும்; சளைக்காத போராளியாக அரசியல் களத்தில் சாகசம் காட்டி இறுதிவரை உழைத்த நம் தலைவருக்கு, அவரது வாழ்நாள் விருப்பத்தை நிறைவேற்றிடும் வகையில் மெரினா கடற்கரையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடம் அருகே ஓய்வெடுக்கும் வகையில் இடம் கிடைப்பதற்கு சட்டப்போராட்டம் நடத்தி, கடைசி நிமிடத்தில் வெற்றி கண்ட நினைவுகளையும்; மறக்க முடியுமா? இரக்கமற்ற ஆட்சியாளர்கள் அங்கே இடம் ஒதுக்க மறுத்த நிலையில், இரவு -பகல் பாராமல் நடத்திய சட்டப் போராட்டத்தின் விளைவாக, நீதி தேவன் மயக்கமின்றி விழிப்புடன் இருந்து வழங்கிய, நியாயத் தீர்ப்பின் நேர்மையை நினைவு கூர்ந்திடும் நாளன்றோ!

இதயமெல்லாம் நிறைந்திருக்கும் இரு நூற்றாண்டு வரலாற்று நாயகர் தலைவர் கலைஞரின் முதலாமாண்டு நினைவு நாளில், சென்னை அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து, வங்கக் கடலோரம் அந்த அண்ணனும் அவரது அன்புத் தம்பியும் அருகருகே துயில்கின்ற இடம் நோக்கி, அமைதிப் பேரணி காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. பேரறிஞர் அண்ணா மறைந்த நாளான பிப்ரவரி 3ஆம் நாள் காலையில் அமைதிப் பேரணியை நடத்தும் வழக்கத்தைத் தொடங்கி வைத்தவர் தலைவர் கலைஞர். அரை நூற்றாண்டாக ஆண்டுதோறும் பிப்ரவரி 3ஆம் நாள் அந்தப் பேரணி நடைபெறுகிறது. அதே வழியில், தலைவர் கலைஞரின் நினைவு போற்றும் அமைதிப் பேரணி அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளில் நடைபெற இருக்கிறது.

உடன்பிறப்புகளின் ஒளிமுகம் காண்பதுதானே தலைவர் கலைஞருக்கு மட்டிலா மகிழ்ச்சி. எத்தனை நெருக்கடிகள்-சோதனைகள்-தோல்விகள்-துரோகங்கள் நிறைந்த சூழலிலும், உடன்பிறப்புகளின் அன்புமுகம் கண்டு விட்டால், அத்தனையையும் தூள் தூளாக்கி விட்டு, குழந்தையின் மனதிலிருந்து வெளிப்படும் கள்ளங்கபடமற்ற குமிழ் சிரிப்பு போல, அவரது முகத்தில் புன்னகை அன்றலர்ந்த ரோஜாவைப் போல் மலர்ந்து உடன்பிறப்புகளைக் கவர்ந்திடுமே! அதனால்தானே கழகத்தின் எந்த ஒரு மாநாடாக இருந்தாலும், முப்பெரும் விழாவாக இருந்தாலும், சிறப்பு நிகழ்வுகளாக இருந்தாலும், “உடன்பிறப்பே உன் முகம் காண விரும்புகிறேன்” எனக் கடிதம் எழுதி அழைப்பு விடுப்பது அவரது வழக்கமாயிற்றே!

“களங்களில் வெற்றியைக் குவித்து கலைஞரின் கால்மலரில் காணிக்கையாக்கிடுவோம்” - மு.க.ஸ்டாலின் மடல்!

அழைப்பு விடுக்க இன்று அருமைத் தலைவர் இல்லாவிட்டாலும், அவரது ஓய்விடத்திலிருந்து நம்மை அழைப்பது போன்றே அந்த கரகரப்பான குரல் நம் மனதில் ஒலிக்கிறது. உயிருக்கு நிகரான தலைவர் கலைஞர் அழைக்கிறார்.. அமைதிப் பேரணிக்கு அலைகடலெனத் திரண்டு வருக உடன்பிறப்புகளே! ஒவ்வொரு மாவட்டக் கழகத்திலிருந்தும் அவற்றிற்குட்பட்ட ஒன்றிய-நகர-பேரூர்-கிளைக் கழகங்களிலிருந்தும் "ஆகஸ்ட் 7" அன்று , திசையெலாம் திணறிட, பெருந்திரளாகச் சூழ்ந்து வந்து பேரணியில் கலந்துகொள்ள வேண்டுமெனக் கனிவன்புடன் அழைக்கிறேன்.

ஆகஸ்ட்டு 7 அமைதிப் பேரணிக்குப் பிறகு, தலைவர் கலைஞர், தனது மூத்த பிள்ளையென காலமெலாம் வளர்த்தெடுத்த - கழகத்தின் எழுத்தாயுதமாம் "முரசொலி" அலுவலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள, அவரது திருவுருவச் சிலையினை திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்கள் தலைமையில், மேற்கு வங்க மாநில முதல்வர் மாண்புமிகு மம்தா பானர்ஜி அவர்கள் தம் திருக்கரங்களால் திறந்து வைக்கும் இனிய நிகழ்வு ஆகஸ்ட் 7 அன்று மாலை 5 மணியளவில் நடைபெறவிருக்கிறது.

கழகத்தின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தின் முகப்பில் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை நின்ற நிலையில் அமைக்கப்பட்டு, திருமதி . சோனியாகாந்தி அம்மையார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. முரசொலி அலுவலக வளாகத்தில் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை, அவர் அமர்ந்த நிலையில் எழுத்தோவியம் தீட்டுவது போன்ற எழுச்சித் தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தாய்க்குத் தரணி போற்றும் புகழ் மாலை சூடும் வகையில், தன் எண்ணங்களில் புரட்சியும் வடிவத்தில் வாடாத அழகும் கொண்ட வண்ணமிகு தமிழ் நடையால், இளமை முதல் இறுதி வரை இமயம் அளவுக்கு எழுதி எழுதிக் குவித்து, சான்றோர் முதல் சாமானியர் வரை அனைவரையும் ஈர்த்திழுத்த தகுதி செறிந்த படைப்பாளியான தலைவர் கலைஞரின் அந்த திருவுருவச் சிலை திறப்பு விழா பொதுக்கூட்டம் மாலை 5.30 மணியளவில் இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில், உங்களின் ஆர்த்தெழும் பங்கேற்புடன் நடைபெறவிருக்கிறது.

“களங்களில் வெற்றியைக் குவித்து கலைஞரின் கால்மலரில் காணிக்கையாக்கிடுவோம்” - மு.க.ஸ்டாலின் மடல்!


தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் தலைவர் தலைமையில் நடைபெறும் இப்பொதுக் கூட்டத்தில், மேற்கு வங்க முதல்வர் அவர்களுடன், தலைவர் கலைஞர் அவர்களின் நெடுங்கால அரசியல் நண்பரும் அவரைப் போலவே மாநில சுயாட்சிப் போராளியுமான ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா அவர்களும், மாநில உரிமைகளுக்காக மத்திய அரசுடன் நெஞ்சுயர்த் நேரடி யாக நித்தமும் போராடிவரும் புதுச்சேரி மாநில முதல்வர் மாண்புமிகு நாராயணசாமி அவர்களும், கலைஞரின் பேரன்பிற்குரிய தமிழ்க் கவிஞரும்-கலைஞரைத் தனது தமிழாசான் என எப்போதும் எந்த அரங்கத்திலும் பெருமை பொங்கிடக் குறிப்பிடத் தவறாதவருமான கன்னித்தமிழ்க் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும் சிறப்புரையாற்றுகிறார்கள்.

விழாவில் திரளவிருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளாம் உங்களை வரவேற்கும் பொறுப்பினை உங்களில் ஒருவனான நான் ஏற்றிருக்கிறேன். தலைவர் கலைஞரின் எழுத்துப் பாசறையில் ஆரம்பநாள் தொட்டே அன்றாடம் பயிற்சி பெற்ற முரசொலி இதழின் ஆசிரியர் அண்ணன் முரசொலி செல்வம் அவர்கள் நன்றியுரை ஆற்றுகிறார்.
ஆண்டு முழுவதும் நமது நினைவுகளில் நின்று-நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் தலைவர் கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு நாளான ஆகஸ்ட் 7 அன்று கழக உடன்பிறப்புகள் சென்னை நோக்கித் திரண்டிட அழைக்கிறேன்!

“களங்களில் வெற்றியைக் குவித்து கலைஞரின் கால்மலரில் காணிக்கையாக்கிடுவோம்” - மு.க.ஸ்டாலின் மடல்!

கடற்கரையில் ஓய் வெடுக்கும் தலைவர் கலைஞரின் நினைவிடம் நோக்கி, பொங்கி வரும் கண்ணீருக்கு அணையிட்டு, அமைதிப் பேரணியை அனைவரும் இணைந்து நடத்திடுவோம். இதயம் நிறைந்த இனிய தலைவரின் ஓய்விடத்தில் மலர் தூவி, நினைவுகளால் வணங்கிடுவோம். அவர் வழியில் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்தைக் காத்து, இனி எதிர்கொள்ளவிருக்கும் களங்கள் அனைத்திலும் வெற்றியினைக் குவித்து அவர்தம் கால்மலரில் காணிக்கையாக்கிடுவோம்; வாரீர்!” இவ்வாறு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

banner

Related Stories

Related Stories