இலக்கியம்

‘கரிசல் இலக்கியத்தின் பிதாமகர்’ கி.ராஜநாராயணன் காலமானார்... எழுத்தாளர்கள், வாசகர்கள் இரங்கல்!

‘தமிழின் மகத்தான கதைசொல்லி’ எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தனது 99 வயதில் காலமானார்.

‘கரிசல் இலக்கியத்தின் பிதாமகர்’ கி.ராஜநாராயணன் காலமானார்... எழுத்தாளர்கள், வாசகர்கள் இரங்கல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கரிசல் இலக்கியத்தின் பிதாமகர், தமிழின் மகத்தான கதைசொல்லி என்றெல்லாம் வாசகர்களால் கொண்டாடப்படும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தனது 99 வயதில் காலமானார்.

திருநெல்வேலி மாவட்டத்தின் (தற்போதைய தூத்துக்குடி மாவட்டம்) கோவில்பட்டியை அடுத்த இடைசெவல் கிராமத்தில் 1922- ஆம் ஆண்டு பிறந்தவர் கி.ராஜாநாராயணன்.

பெற்றோருக்கு ஐந்தாவதாகப் பிறந்த கி.ரா, ஏழாம் வகுப்பு வரை படித்துவிட்டு விவசாயம் பார்த்து வந்தார். 35 வயதுக்குப் பின்னர் எழுத்தாளராக மாறினார்.

கரிசல் மண்ணின் கதைகளை, மக்களின் வாழ்க்கையை தனது எழுத்துகளில் சிறப்பாகக் கையாண்ட கி.ரா, தனக்கெனத் தனி பாணியைக் கைக்கொண்டு எழுத்துலகின் முக்கிய இடத்தைப் பிடித்தார்.

‘கோபல்லபுரத்து மக்கள்’ நாவலுக்காக 1991-ல் சாகித்ய அகாடமி விருது பெற்றார் கி.ரா. இலக்கியச் சிந்தனை விருது, தமிழக அரசு விருது, கனடா இலக்கியத் தோட்டம் வழங்கிய தமிழ் இலக்கியச் சாதனை-2016 சிறப்பு விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

தள்ளாத வயதிலும் தளராமல் தொடர்ந்து எழுதிவந்த கி.ரா, கடந்த மாதம் ‘மிச்சக் கதைகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார்.

தற்போது புதுச்சேரி லாசுப்பேட்டையில் உள்ள அரசுக் குடியிருப்பில் வசித்து வந்த இவர், வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று இரவு காலமானார்.

எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் மறைவு, இலக்கிய உலகத்தையும், அவரது வாசகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கி.ராஜநாராயணன் அவருடைய எழுத்தாக்கங்களுக்கும் படைப்புகளுக்குமான உரிமை டிசம்பர் 26, 2020 முதல் மூவரைச் சேரும் என்று எழுதி வைத்துள்ளார். 1) சங்கர் (எ) புதுவை இளவேனில், 2) திவாகரன், 3) பிரபாகர். சங்கர் என்ற புதுவை இளவேனில் அவரது வாசகர், மற்ற இருவர் அவரது மகன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தி.மு.க எம்.பி கனிமொழி, “எழுத்தாளர் கி.ரா அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும். தூத்துக்குடி மாவட்டம், இடைச்செவல் கிராமத்தில் பிறந்த அவர், கரிசல் மண்ணின் கதைகளை அவர்களின் மொழியில் எழுதியதுடன்,கரிசல் வட்டார அகராதியைத் தொகுத்ததன் மூலம்,வட்டார மொழிக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திட உழைத்தவர். பழகுவதற்கு இனியவர்.

அவரை நான் பல முறை சந்தித்த போதெல்லாம் அவரது தெளிந்த சிந்தனையையும், நகைச்சுவை உணர்வையும் கண்டு வியந்திருக்கிறேன். சென்ற முறை பாண்டிச்சேரி சென்றபோது அவரையும் அவரது மனைவி கணவதி அம்மையாரையும் நேரில் சந்தித்து மகிழ்ந்தேன்.

இப்போது இருவருமே நம்மிடையே இல்லை. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories