இலக்கியம்

திருக்குறளை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்த தமிழறிஞர் பிரான்சுவா குரோ காலமானார்!

சங்கத் தமிழிலிருந்து தற்காலத் தமிழ் வரை நீளும் இவரது ஈடுபாடு பல்வேறு தமிழ்ப் படைப்புகளைப் பிரெஞ்சு மொழிக்குக் கொண்டு சென்றுள்ளது.

திருக்குறளை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்த தமிழறிஞர் பிரான்சுவா குரோ காலமானார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தமிழறிஞர் பிரான்சுவா குரோ (Francois Gros). 1960களின் தொடக்கத்திலிருந்து தமிழில் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்த பிரான்சுவா குரோ (1933 - 2021) பாரீசில், பாரீஸ் பல்கலைக்கழகத்தின் Ecole Pratique Des Hautes Etudes என்ற உயர் ஆராய்ச்சி நிறுவனத்தின் தென்னிந்திய வரலாறு மற்றும் மொழியியலுக்கான (Philology) பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் இந்தியவியல் துறையில் தனது ஆராய்ச்சிப் பணியைத் துவக்கிய பிரான்சுவா குரோ 1977 முதல் 1989 வரை தூரக் கிழக்கு நாடுகளுக்கான பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராகப் பணிபுரிந்தார்.

சங்கத் தமிழிலிருந்து தற்காலத் தமிழ் வரை நீளும் இவரது ஈடுபாடு பல்வேறு தமிழ்ப் படைப்புகளைப் பிரெஞ்சு மொழிக்குக் கொண்டு சென்றுள்ளது. பரிபாடல் (1968) திருக்குறள் காமத்துப்பால் (1993) இரண்டும் பிரெஞ்சில் நூல் வடிவம் பெற்றுள்ளன. தற்காலத் தமிழ்ச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மூன்று மாதக் காலத்தைப் புதுச்சேரியில் தனது ஆராய்ச்சிப் பணிகளுக்காகச் செலவிட்டு வந்த பிரான்சுவா குரோ பிரான்சின் தென்கிழக்கில் உள்ள லியோன் நகரத்தில் வாழ்ந்துவந்தார். அண்மைக் காலமாக உடல்நலக் குறைவால் புதுச்சேரிக்கு வராமல் பிரான்ஸ் நாட்டிலேயே தங்கியிருந்த பிரான்சுவா குரோ தன்னிடமிருந்த சுமார் 10 ஆயிரம் அரிய நூல்களைக் கனடாவில் உள்ள டொரண்டோ பல்கலைக்கழகத்துக்கு வழங்கிவிட்டார்.

அவரது தமிழ் ஆய்வுக் கட்டுரைகள் உலகளவில் புகழ்ப் பெற்ற இதழ்களில் வெளியாகியுள்ளன. பிரான்சுவா குரோவின் மறைவு தமிழ் செவ்வியல் இலக்கியத்திற்கு மட்டுமின்றி, நவீனத் தமிழிலக்கியத்திற்கும் பேரிழப்பாகும்.

banner

Related Stories

Related Stories