இலக்கியம்

வாழ்வியல் யதார்த்தத்தை போகிறபோக்கில் சொல்லும் ‘செல்லாத பணம்’- சாகித்ய அகாடமி விருதுபெற்ற இமையத்தின் நூல்!

மனித உறவுகளில் சாதி, பணம், தகுதி எத்தகைய சிக்கல்களைத் தோற்றுவிக்கிறது என்பதை படைப்பிலக்கியங்களால்தான் உணர்வுபூர்வமாகச் சொல்லமுடியும். அதற்கு, இமையத்தின் செல்லாத பணமே சாட்சி.

வாழ்வியல் யதார்த்தத்தை போகிறபோக்கில் சொல்லும் ‘செல்லாத பணம்’- சாகித்ய அகாடமி விருதுபெற்ற இமையத்தின் நூல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்திய இலக்கியத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான சாகித்ய அகாடமி விருதுகளை ஒவ்வொரு ஆண்டும் மொழி வாரியாக வழங்கி வருகிறது இந்திய அரசு. இந்த வருடத்திற்கான சாகித்ய அகாடமி விருதுகள் சற்று முன்பு அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ் மொழிக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் எழுதி 2018ம் ஆண்டு க்ரியா பதிப்பகம் வெளியிட்ட ‘செல்லாத பணம்’ நாவலுக்காக சாகித்ய அகாடமி அறிவிக்கப்பட்டுள்ளது.

'செல்லாத பணம்’ நாவல் குறித்து பேராசிரியர் ப.பத்மினி என்பவர் இந்து தமிழ் திசை நாளிதழில் எழுதிய நூல் மதிப்புரை வருமாறு:

சாதியைக் கடந்து திருமணம் செய்துகொள்ளும் ஒரு பெண், சாதியத் தன்னிலைகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டு எவ்வாறு தன்னைப் பலிக்கொடுக்க வேண்டியுள்ளது என்ற யதார்த்தத்தை மிக நுட்பமாகவும், ஆழமாகவும் முன்வைக்கிறது இமையத்தின் ‘செல்லாத பணம்’ நாவல்.

சமூக அமைப்பின் ‘உள்ளே’, ‘வெளியே’ என்ற கருத்தாக்கத்தின் ஊடாக இந்நாவலை அணுகலாம். வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த ரேவதியின் குடும்பத்தையும் ரவியின் குடும்பத்தையும் பிரிக்கும் எல்லைக்கோடு எங்கே இருக்கிறது என்ற கேள்வியை இந்நாவல் சிறப்பாகக் கையாள்கிறது. இந்த நாவலில் ‘உள்ளே, வெளியே’ இரண்டுக்கும் இடையேயான தொலைவு ஒரு கிலோ மீட்டர்தான். இந்தத் தொலைவு கடக்கவே முடியாத ஒன்றாகிறது. சாதி, தொழில், படிப்பு, பொருளாதார வசதி, சுற்றத்தார் மதிப்பு என்று எதிலுமே தனக்குச் சமமில்லாத ரவியின் காதலை ரேவதி ஏற்றுக்கொள்கிறாள். பொறியியல் படிப்பை முடித்துக் கையில் நல்ல வேலைக்கான உத்தரவோடு இருக்கும் ரேவதி, ரவியைத் தவிர வேறொருவனைத் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று பிடிவாதமாக நிற்கிறாள்.

வாழ்வியல் யதார்த்தத்தை போகிறபோக்கில் சொல்லும் ‘செல்லாத பணம்’- சாகித்ய அகாடமி விருதுபெற்ற இமையத்தின் நூல்!

அதையடுத்து, தீக்காயங்களோடு ரேவதி மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்படும் சேதிதான் நமக்குச் சொல்லப்படுகிறது. நாவலும் இங்கிருந்துதான் தொடங்குகிறது. ரேவதி கொலை செய்யப்பட்டாளா, தற்கொலை செய்துகொண்டாளா அல்லது விபத்தா என்று நியாயமாக எழக்கூடிய கேள்விகள் அர்த்தமிழந்துபோகின்றன. ரேவதியின் வாக்குமூலத்தின்படி இது ஒரு விபத்து. ரவியின் விவரிப்புப்படி இது தற்கொலை. ரேவதி வீட்டாரைப் பொருத்தமட்டில் இது ரவி செய்த கொலை.

ரேவதியின் வீட்டார் அவள் விருப்பப்படியே திருமணத்தை நடத்திவைத்தாலும், அவள் கணவனையும் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளையும் வேறு விதமாகவே எதிர்கொள்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகு ரேவதி பலமுறை பண உதவி கேட்டுப் பிறந்த வீட்டிற்கு வருகிறாள். ஆனால் ஒரு முறைகூட ரவியோ குழந்தைகளோ வீட்டுக்குள் நுழைந்ததில்லை. ரேவதியின் வீட்டார், ரேவதியையோ பேரப்பிள்ளைகளையோ பார்ப்பதற்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தைக்கூட கடக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். அவ்வப்போது அவளது கணவனை ஏளனப்படுத்தி, குரூரமான தங்கள் மேலாண்மையை நிலைநாட்டிக்கொள்ளவே விரும்புகிறார்கள். தாய், தந்தை, சகோதரன் என்ற ஒரு வெளி, கணவன் குழந்தைகள் என்ற வெளி. எது உள்ளே எது வெளியே என்ற புரியாமல் இரண்டு சக்கரங்களுக்கு இடையில் மாட்டிக்கொள்கிறாள் ரேவதி.

இந்தச் சிக்கல் ரேவதியின் குடும்பத்தாருக்கோ, ரவியின் குடும்பத்தாருக்கோ இல்லை. விருப்பமில்லை என்றாலும், ரேவதியின் குடும்பத்தார் திருமணம் முடித்துவைத்தார்கள். தேவைப்படும்போதெல்லாம் பண உதவி செய்தார்கள். பெற்ற மகள் கஷ்டப்படக்கூடாது என்றுதான் ரேவதியின் தாயார் பண உதவி செய்தாள். தந்தையும், சகோதரனும் இதைத் தடுக்கவில்லை. இந்த ‘நல்லதுகள்’ ஊடாக தங்களுடைய சாதியத் தன்னிலையை ரேவதியின் முகத்தைக்கூட பார்க்காமல், ஒரு முறையேனும் பேசாமல் அவளுடைய தந்தையும் சகோதரனும் உறுதிப்படுத்திக்கொண்டார்கள்.

வாழ்வியல் யதார்த்தத்தை போகிறபோக்கில் சொல்லும் ‘செல்லாத பணம்’- சாகித்ய அகாடமி விருதுபெற்ற இமையத்தின் நூல்!

பணத்தின் மூலமாக, தொடர்ந்து தான் வெளியே நிறுத்தப்படுவதை ரவி உணர்கிறான். அவனது பலவீனங்களோடு சேர்ந்து அவனை ரேவதியின் வீட்டார் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அவனால் தெளிவாக வெளிப்படுத்த முடியவில்லை. அதனாலயே திரும்பத் திரும்ப பணம் வாங்கி வா என்று ரேவதியைத் துன்புறுத்துகிறான். ரேவதி குடும்பத்தாரின் சாதிய மேலாண்மை பணத்தின் வடிவத்தை எடுக்கிறது என்றால், அந்தக் குடும்பம் தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பும் அதே பணத்தின் ஊடாகவே வெளிப்படுத்தப்படுகிறது. துயரம் இங்கிருந்துதான் தொடங்குகிறது.

ரவியும் அவனது எல்லைக்குள் சுருங்கியவனாக இருக்கிறான். அவனது சகோதரியின் திருமணம் பற்றிப் பேச்சு வரும் போது அவனுக்கும் ரேவதியின் குடும்பத்தாருக்கும் எத்தகைய வேறுபாடும் இருப்பதில்லை. மேலும், ரேவதி வேலைக்குப் போகக்கூடாது; அக்கம் பக்கம் பேசக் கூடாது. தெருவில் நடக்கக் கூடாது என்று கட்டுப்பாடுகளை விதித்து ரவியும் தான் ஒரு ஆண் என்ற தன்னிலைக்குள்ளும் சாதியத் தன்னிலைக்குள்ளும் சுருங்கியவனாகத்தான் இருக்கிறான். எல்லையைக் கடந்து பயணித்தவள் ரேவதி மட்டும்தான். அவளும் இரண்டு வேறுப்பட்ட சாதியத் தன்னிலைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டு எரிந்து கருகிய உடலாகிறாள்.

அவசரச் சிகிச்சைப் பிரிவுக்கு எரிந்துபோன பெண் உடல்கள் தொடர்ந்து வந்துகொண்டேதானிருக்கிறது. அதேநேரத்தில், எரிந்து இறந்துபோன தன் தாயின் அனுபவத்தின் ஊடாக நிறுவனங்களின் மீது இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்க உதவும் ஆனந்தகுமாரும், எரிந்து உயிருக்குப் போராடும் நிலையில் மகள் இருந்தாலும் வாழ்வியல் யதார்த்த்தைப் போகிற போக்கில் சொல்லிப்போகும் தங்கம்மாளும், பிரிந்துபோன ஆட்டுக்குட்டியையும் எரிந்துபோன மகளையும் ஒன்றாய்ப் பார்க்கும் மலரும் மானுட நம்பிக்கையை மீட்டெடுக்கிறார்கள்.

மனித உறவுகளில் சாதி, பணம், தகுதி எத்தகைய சிக்கல்களைத் தோற்றுவிக்கிறது என்பதை படைப்பிலக்கியங்களால்தான் உணர்வுபூர்வமாகச் சொல்லமுடியும். அதற்கு, இமையத்தின் ‘செல்லாத பண’மே சாட்சி.

நன்றி: பேராசிரியர் ப.பத்மினி & இந்து தமிழ் திசை

banner

Related Stories

Related Stories