ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் பொங்கல் விழாவுடன் சேர்ந்து 10 நாட்களுக்குச் சென்னை புத்தகக் காட்சி நடைபெறும். எல்லாவற்றையும் முடக்கிப் போட்ட கொரோனா புத்தகக் காட்சியை மட்டும் விட்டு வைக்குமா? புத்தகக் காட்சியையும் முடக்கியது. இதனால் ஜனவரி மாதத்தில் புத்தகக் காட்சி நடைபெறாததால் புத்தக காதலர்கள் கொஞ்சம் வருத்தப்பட்டனர்.
இந்நிலையில், 24ம் தேதி 44வது புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தொடங்குகிறது என தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் பபாசியின் தலைவர் ஆர்.எஸ்.சண்முகம், செயலாளர் எஸ்.முருகன், பொருளாளர் ஏ.கோமதிநாயகம் ஆகியோர் புத்தகக் காட்சிக்கான இலச்சினையை வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.
நவம்பர் 24ம் தேதி துவங்கி, மார்ச் 9 ஆம் தேதி வரை புத்தகக் காட்சி நடைபெறுகிறது. அனுமதி கட்டணமாக ரூபாய் 10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் 700 அரங்குகள், 500 பதிப்பாளர்கள், 6 லட்சம் புத்தகங்கள் புத்தக காதலர்களைச் சந்திக்கத் தயாராக உள்ளது. தினந்தோறும் காலை 11 மணிக்குத் தொடங்கும் கண்காட்சி, இரவு 8 மணிக்கு நிறைவு பெறும்.
இதற்கு முன்பு நடைபெற்ற புத்தகக் காட்சியில் வேளை நாட்களில் மதியம் 2 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரையும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலையில் இருந்து இரவு வரையும் நடைபெறும். இம்முறை புத்தகக் கண்காட்சி 11 மணிக்கே துவங்கி விடுவதால் புத்தகங்களை வேக வேகமாக வாங்காமல் நின்று நிதானமாகப் பார்த்து வாங்கிச் செல்வதற்கு கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளது.
மேலும், 10 லட்சம் வாசகர்கள் எழுத்தாளர்களுக்கும், பதிப்பாளர்களுக்கும் பயனளிக்கும் வகையில் ‘ரேக்’ என்ற புதிய திட்டம் இந்த புத்தக கண்காட்சியில் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் வழியாகச் சிறிய பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் புத்தகங்களைக் காட்சிப்படுத்தலாம். மேலும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய நூல்களை தனி அரங்கில் காட்சிப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புத்தகக் காட்சியையொட்டி நாளை காலை 6 மணிக்கு சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் இருந்து மினி மாரத்தான் ஓட்டம் நடைபெறுகிறது. அதேபோல் 28ம் தேதி உலக அறிவியல் தினத்தையொட்டியும், மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தையொட்டியும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் புத்தக வெளியீடுகள், சிறந்த புத்தகங்களின் அறிமுகம், விமர்சன நிகழ்வுகள் ஆகியவையும் நடைபெறுகிறது.
கொரோனா நோய்த்தொற்றுக்கு மத்தியில் புத்தகக் காட்சி நடத்தப்படுவதால், அரங்குகளுக்கான பாதைகள் வாசகர்கள் நெரிசலின்றி செல்வதற்கு ஏதுவாக விசாலமாக அமைக்கப்பட்டுள்ளன. எனவே புத்தக காதலர்களே, தாங்கள் வாங்க விரும்பும் புத்தகங்களின் பட்டியலைத் தயார் செய்து, சென்னைக்கு டிக்கெட் எடுத்து தயாராகி விடுங்கள்..!