புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மைந்தரும், முதுபெரும் தமிழறிஞரும், விடுதலைப்போராட்ட வீரருமான தமிழ்மாமணி மன்னர் மன்னன் என்கிற கோபதி இன்று (ஜூலை 07) பிற்பகல் புதுச்சேரியில் காலமானார். அவருக்கு வயது 92. கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பின் காரணமாக உடல் நலம் குன்றி இருந்தார்.
புதுச்சேரி வானொலி நிலையத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய மன்னர் மன்னன் ஏறத்தாழ 50 நூல்கள் எழுதியுள்ளார். பல அமைப்புகளில் முக்கிய பொறுப்பில் இருந்தார். புதுவைத்தமிழ்ச்சங்கத்தில் தலைவராகப் பல ஆண்டுகள் பொறுப்பில் இருந்து அதற்கு சொந்தக்கட்டடம் கட்டித்தந்தார்.
தமிழக அரசின் திரு.வி.க விருது, கலைமாமணி விருது, புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி, கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். மிகச்சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர். பாரதிதாசனின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலில் எழுதி வெளியிட்டார். இந்திய விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி. மொழிப்போர் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றார்.
தமிழறிஞர்கள் பலருடன் நெருங்கிப் பழகிய இவர். காமராசர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், முன்னாள் முதல்வர் எம்.ஜி ஆர்., ஜெயலலிதா, நெடுஞ்செழியன், அன்பழகன் போன்ற தலைவர்களுடன் பழகி அவர்களின் அன்பைப் பெற்றவர்.
இவர் மனைவி சாவித்திரி 30 ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். இவருக்கு செல்வம், தென்னவன், கவிஞர் பாரதி ஆகிய மகன்களும் அமுதவல்லி என்ற மகளும் உள்ளனர். புதுச்சேரியில் நாளை மாலை 4 மணியளில் மறைந்த தமிழ்மாமணி மன்னர் மன்னனின் இறுதி நிகழ்வுகள் நடைபெறும். இந்தத் தகவலை அவரது மகன் பாரதிதாசன் அறக்கட்டளைத்தலைவர் கவிஞர் கோ.பாரதி தெரிவத்துள்ளார்.