எழுத்தாளர் பா. செயப்பிரகாசத்திற்கு எதிரான ஜெயமோகனின் அவதூறுக்கு அனைத்து தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழின் முன்னணி எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்களின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“தமிழின் முதுபெரும் எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் மீது தனது இணையப் பக்கத்தில் ஜெயமோகன் செய்துள்ள துல்லியத் தாக்குதல் மிக மோசமானது, உள்நோக்கமுடையது.
தமிழின் கலை இலக்கியப் பண்பாட்டுச் சூழலில் காத்திரமான பங்களிப்பு செய்துள்ள அவரை, ஒரு அநாமதேயக் கடிதம் மூலம் அவதூறு செய்யவும், சிறுமைப்படுத்தவும் ஜெயமோகன் மேற்கொண்டுள்ள இழிசெயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
கரிசல் இலக்கியத்தில் வேர்பதித்து எழுத்தைத் தொடங்கினாலும், எல்லைகள் கடந்த சமதர்ம சமுதாயம் நோக்கி கிளை பரப்பியவர் பா. செயப்பிரகாசம். ஏறத்தாழ 135 சிறுகதைகள், பள்ளிக்கூடம், மணல் என்னும் இரு நாவல்கள், மூன்று குறு நாவல்கள், இரு கவிதைத் தொகுப்புகள், பதினான்கு கட்டுரை நூல்கள், இலக்கிய, சமுதாய அரங்குகளில் உரைகள் எனத் தொடர்ந்து இயங்கி வருகிறவர்.
சமீபத்திய அவருடைய மணல் நாவல் வரை அவருடைய எந்த ஒரு எழுத்தும், உரையும் செயல்பாடுகளும் சாதிய உணர்வைத் தூண்டியதாக சின்னனஞ்சிறு கறுப்புப் புள்ளி அடையாளமும் கொண்டதில்லை; ஆனால் சாதிக்கொடுமைகளைச் சாடிய அவருடைய எழுத்துகள் கணக்கற்றவை.
அவருடைய பள்ளிக்கூடம், மணல் ஆகிய இருநாவல்களுக்கும் சாதியத்தை எதிர்த்த அடிநாதம்தான் பேசுபொருள். பொருளியல், வாழ்வியல் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுத்தும் சிறுமைகள் பேசும் அவருடைய கதைகளின் ஆற்றலை எந்த ஒரு தேர்ந்த வாசகனும் உணர்ந்து கொள்ளமுடியும். அவர் தனது எழுத்துகளை என்றும் வணிகமாக்கியதில்லை.
1965- இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் மாணவப் போராளியாய் முன்னின்று, தமிழகம் முழுமையும் போராட்டத்தை எடுத்துச் சென்றதால், இந்திய தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிருந்த பத்து மாணவர் தலைவர்களில் ஒருவர். தமிழ்த் தேசியம், ஈழம், மார்கசீயம், பெரியாரியம், அம்பேத்காரியம் குறித்த எழுத்துகளில் சமரசம் இல்லாப் போராளி.
இலக்கியம், களப்போராட்டம் எனத் தொடர்ந்து பல தளங்களிலும் இயங்கி வருபவர். இப்படிப்பட்ட தமிழ் ஆளுமை மீது ஜெயமோகன் கோபப்படுவதும், பழி தூற்றுவதும் நமக்கு ஒன்றும் ஆச்சரியம் அளிக்கவில்லை. தொடர்ந்த தனது பேச்சுகளின் மூலமாக, எழுத்துகளின் மூலமாக சர்ச்சைகளை உருவாக்கி, தமிழ் அறிவுச்சூழலில் தான் ஒரு பேசுபொருளாக இருக்கவேண்டும் என்ற முனைப்பில் தனது பிம்பத்தைக் கட்டமைத்துக் கொண்டு வருகிறவர் ஜெயமோகன்.
தமிழ் அறிவுச்சூழலுக்கு மிகவும் அபாயகரமானது இந்தத் தொற்று நோய், இந்தப் போக்கு என்னும் ஒட்டுவாரொட்டி நோய் தமிழ் இலக்கிய, அறிவுச் சூழலில் கேடு பயப்பதும் கூட. ஜெயமோகனின் சமதர்மச் சிந்தனை எதிர்க்குரல், மார்க்சிய எதிர்ப்பு என்பது நாம் அறிந்த ஒன்று.
அதற்கான எதிர்வினையைப் பல்வேறு தளங்களில் மிக அமைதியாக ஆற்றி வருகிறோம். எந்த ஆதாரங்களுமில்லாது, ஒரு அநாமதேயம் எழுதியதாக தனிநபர் மீதான வன்மம், அவதூறு என்பவை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கண்டனம் செய்யப்படவேண்டிய ஒன்று.
அது சமூக அக்கறையுள்ள கலை, இலக்கிய, அறிவுச் சூழல், இடதுசாரிச் சிந்தனைகள், இயக்கங்கள், எழுத்துகள், செயற்பாடுகள் அனைத்தின் மீதான அவதூறு என்பதால் ஜெயமோகனுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்”.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.