உலகளாவிய நிறுவனமான அமேஸான் ஆண்டுதோறும் ‘பென் டு பப்ளிஷ்’ எனும் பெயரில் எழுத்தாளர்களுக்கான மாபெரும் பரிசுப் போட்டியை நடத்தி வருகிறது. எழுதும் ஆர்வம் மிகுந்த, அச்சுப்புத்தகம் கொண்டு வர வசதியற்ற பலருக்கு அமேஸான் கிண்டில் வரப்பிரசாதமாக இருப்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், ‘பென் டு பப்ளிஷ்’ போட்டி கடந்தாண்டு முதல் தமிழ் மொழிக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இந்தியாவில் தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளில் இந்த போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
வாசகர்களின் ஆதரவு, நடுவர்களின் தேர்வு ஆகிய இரு கட்டங்களின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். வெற்றி பெறும் எழுத்தாளர்களுக்கு மிக அதிக பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுப் போட்டி கடந்த செப்டம்பர் மாதம் துவங்கியது. நடுவர்களாக எழுத்தாளர்கள் துர்ஜோய் தத்தா, சுதா நாயர், திவ்யா பிரகாஷ் துபே, பா.ராகவன் மற்றும் சி.சரவண கார்த்திகேயன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
Long form பிரிவில் முதல் பரிசு ரூ. 5 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ. 1 லட்சம், மூன்றாவது பரிசாக ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும். அதேபோல Short Form பிரிவில் முதல் பரிசாக ரூ. 50 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 25 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும்.
மேலும், இறுதிப் போட்டியாளர்களின் படைப்புகள், 'அமேஸான் பிரைம்' வீடியோ படைப்பாகவும் வெளிவரக்கூடும். அதற்கான ஊதியமும் ரூ. 7 லட்சம் என அறிவிக்கப்பட்டது. இதனால் எழுத்தாளர்கள் மிக ஆர்வமாக இப்போட்டியில் பங்கேற்றனர்.
‘Pen to Publish 2019' போட்டியின் முதல் சுற்று முடிவுகள் சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று இறுதி வெற்றியாளர்கள் அமேஸான் கிண்டில் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, தமிழ் மொழிப் பிரிவில் 10,000 வார்த்தைகளுக்கு மேற்பட்ட (Long Form) நூல்களுக்கான பிரிவில் மருத்துவர் ப்ரூனோ குரு வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் எழுதிய ‘பேலியோ உணவின் அறிவியலும் உளவியலும்’ என்கிற நூலுக்காக முதல் பரிசான ரூபாய் 5 லட்சம் பரிசு பெறுகிறார்.
அதே பிரிவில் இரண்டாம் பரிசை ‘R.சோமசுந்தரத்தின் காதல் கதை’ எனும் படைப்பை எழுதிய டான் அசோக் மற்றும் மூன்றாம் பரிசை ‘ஷாந்தினி சொர்க்கம்’ நூலை எழுதிய குணசீலன் ஆகியோர் பெறுகின்றனர்.
தமிழ் மொழிப் பிரிவில் 2,000 - 10,000 வார்த்தைகளுக்கு உட்பட்ட (Short Form) நூல்களுக்கான பிரிவில், ‘2K Kid: திருவள்ளுவர் ஆண்டு’ நூலை எழுதிய ஊடகவியலாளர் கோவி.லெனின் முதல் பரிசைப் பெறுகிறார்.
அதே பிரிவில் அடுத்தடுத்த இடங்களை ‘பயணம் (இல்லை) பணயம்' நூலுக்காக பாலசிங் சந்திரசேகரும், ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு' நூலுக்காக ரவிசங்கர் அய்யாக்கண்ணுவும் பெறுகின்றனர்.