இலக்கியத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான சாகித்ய அகாடமி விருதுகளை ஒவ்வொரு ஆண்டும் மொழி வாரியாக வழங்கி வருகிறது இந்திய அரசு. இந்த வருடத்திற்கான சாகித்ய அகாடமி விருதுகள் சற்று முன்பு அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ் மொழிக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் சோ.தர்மன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் எழுதி 2016ம் ஆண்டு வெளிவந்த ‘சூல்’ நாவலுக்காக சாகித்ய அகாடமி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சாகித்ய அகாடமி விருதுகள் பிப்ரவரி 25ம் தேதி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் சோ.தர்மன் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உருளைக்குடியைச் சேர்ந்தவர். 1980களிலிருந்து எழுதி வரும் சோ.தர்மன் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பஞ்சாலைத் தொழிலாளியாக வேலை பார்த்தவர்.
எழுத்தாளர் சோ.தர்மனின் முதல் சிறுகதைத் தொகுப்பு 1992ல் வெளியானது. பின்னர் ‘தூர்வை’ (நாவல்) சோகவனம்' (சிறுகதை தொகுப்பு) `வனக்குமாரன்' (சிறுகதை தொகுப்பு) `கூகை' (நாவல்) உள்ளிட்ட பல படைப்புகளை எழுதியுள்ளார்.
தற்போது, சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கும் இவரது நாவலான ‘சூல்’, உருளைக்குடி ராஜா காலத்து அரண்மனை அமைப்பிலிருந்து இன்றைய அரசாங்க அமைப்பாக மாறிய பரிமாற்றத்தை கிராமத்து நடையில் கதையாக்கியிருக்கும் படைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. நிறைசூலியான கண்மாய் வறண்டு போனதைக் குறியீடாகக் கொண்டு நகரும் நாவல் என இலக்கிய விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
‘கூகை’ நாவலுக்காக ஏற்கனவே சோ.தர்மன் தமிழக அரசின் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.