பேரறிஞர் அண்ணாவின் எழுத்து, பேச்சு, படைப்புகள் ஆகியவற்றை "அண்ணா அறிவுக்கொடை" என்ற பெயரில் நூற்றுப்பத்து தொகுதிகளாக வெளியிடுகிறது தமிழ்மண் பதிப்பகம். முதற்கட்டமாக 64 தொகுதிகளை டிசம்பர் 21 அன்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பெற்றுக்கொள்கிறார்.
டிசம்பர் 21ம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் "அண்ணா அறிவுக்கொடை" நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையேற்க, "அண்ணா அறிவுக்கொடை" தொகுதிகளை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு பேருரை ஆற்றுகிறார்.
பிப்ரவரி 3ம் தேதி மீதமுள்ள 46 தொகுதிகள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திராவிட இயக்க வரலாற்றில் முதன்முறையாக அறிஞர் அண்ணாவின் கருவூலத்தை ஒட்டுமொத்தமாக தமிழ்மண் பதிப்பகம் வெளியிடுகிறது.
இதேபோன்று கலைஞர், பெரியார், நாவலர் நெடுஞ்செழியன், சிற்றரசு, அண்ணாவைப் பற்றி அண்ணாவின் குணநலன் பற்றி இதுவரை யாரும் அறிந்திராத தகவல்களைக் கொண்ட தொகுப்புகளும் வெளியிடப்பட உள்ளதாகவும் தமிழ்மண் பதிப்பகத்தைச் சேர்ந்த கோ.இளவழகன் தெரிவித்தார்.
நூல் வெளியீட்டு விழாவிற்கு முன்னதாக காலை 10 மணி முதல் மூன்று கருத்தரங்க அமர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், வழக்கறிஞர் அருள்மொழி, சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்ற உள்ளனர்.