சாகித்ய அகடாமி விருதுபெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் மனைவி கணவதி அம்மா சமீபத்தில் காலமானார். 97 வயதான எழுத்தாளர் கி.ரா-வின் இயக்கத்திற்கு பக்கபலமாக விளங்கியவர் கணவதி அம்மா. அன்னாருடைய படத்திறப்பு விழா- கி.ரா.வுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி புதுச்சேரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலத்தில் உள்ள கருத்தரங்க கூடத்தில் நாளை (19ம் தேதி) பிற்பகலில் நிகழ்ச்சி தொடங்குகிறது. கரிசல் அறக்கட்டளை சார்பில் வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன், புதுச்சேரி பல்கலைக்கழக தமிழ்த்துறை அறிஞர்கள் முன்னெடுக்கும் இந்த நிகழ்வில் ஒருங்கிணைப்பு உரையை எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் நிகழ்த்துகிறார்.
புதுவைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங் விழாவுக்கு தலைமை தாங்குகிறார். வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் நோக்கவுரை ஆற்றுகிறார். கணவதி அம்மாவின் திருவுருவப் படத்தினை பழ.நெடுமாறன் திறந்து வைக்கிறார். திரைக்கலைஞர் சிவக்குமார், மருத்துவர் வெ.ஜீவானந்தம் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.
நிகழ்வில் பேராசிரியர்கள் இளமதி ஜானகிராமன், திருநாகலிங்கம், க.பஞ்சாங்கம், இராச.திருமாவளவன், பக்தவத்சல பாரதி, சிலம்பு நா.செல்வராசு, சு.ஆ.வெங்கடசுப்புராய நாயகர், மூ.கருணாநிதி, ஸ்ரீவித்யா, லட்சுமி தத்தை, கவிஞர்கள் சீனு.தமிழ்மணி, மு.பாலசுப்ரமணியன், இளங்கவி அருள், வெ.சேஷாசலம், இரா.மீனாட்சி, கு.அ.தமிழ்மொழி, ஒளிக்கலைஞர் புதுவை இளவேனில், ஆசிரியர் அமரநாதன், நெய்வேலி சாந்தி, இசைக்கலைஞர் உமா அமர்நாத், வி.சி.க.பாவாணன், கி.ரா மகன்கள் திவாகரன், பிரபாகரன் ஆகியோர் நெகிழ்வுரை ஆற்றுகிறார்கள்.
விழாவுக்கான ஏற்பாடுகளை எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், கவிஞர் இளங்கவி அருள், பேராசிரியர் பா.ரவிக்குமார் உள்ளிட்ட குழுவினர் செய்து வருகின்றனர்.