இலக்கியம்

“தமிழும் திராவிடமும் வேறு வேறா?” - மறுக்கும் கவிஞர் மகுடேசுவரன்!

தமிழும், திராவிடமும் வேறு வெறு என்கிற வாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் இரண்டும் ஒன்றே என நிறுவும் வகையில் விளக்கியுள்ளார் கவிஞர் மகுடேசுவரன்.

“தமிழும் திராவிடமும் வேறு வேறா?” - மறுக்கும் கவிஞர் மகுடேசுவரன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

திராவிடம் வேறு, தமிழ் வேறு என்று ஒரு வழக்கு கடுமையாக நடந்துகொண்டிருக்கிறது.

திராவிடம் என்ற சொல் பழைய தமிழ்நூல்களில் இல்லை என்போர் ஒரு தரப்பினர். தமிழ் என்ற சொல்லும்கூட முன்னைப்பழம் நூல்களில் அரிதிற்காணக்கூடிய நிலையில்தான் இருக்கிறது.

இவ்விரண்டு சொற்களும் ஒன்றா, வெவ்வேறா என்று அறிதல் கட்டாயம்.

அமிழ்து என்பதனை மும்முறை அடுக்கினால் அமிழ்தமிழ்தமிழ்து என்றாகும். பண் இனிமை கருதி நம் மொழிக்குத் தமிழ் என்ற பெயர் வழங்கப்படலாயிற்று என்று கொள்வது பொருத்தம்.

தமிழ் என்கின்ற சொல் எவ்வாறெல்லாம் ஆகும் என்று பார்க்க வேண்டும்.

ழ என்ற ஒலிப்பு எல்லார்க்கும் இயல்வதில்லை. பிறமொழியினர்க்கு இது கடினமாகவே இருக்கும்.

இந்த ழகரம் தமிழ்ச் சொற்களிலேயே தனக்கு மாற்றாக டகரத்தைக் கொண்டுவரும்.

குழல் என்ற சொல்லை எடுத்துக்கொள்ளுங்கள். நடுவில் உள்ளீடற்று இருக்கும் ஒரு பொருளே குழல் எனப்படுவது. அச்சொல்லிலுள்ள ழ என்ற எழுத்து டகரத்தைப் பெற்றுக்கொள்ளும். இப்போது குழல் என்ற சொல் குடல் என்று ஆகிவிடும்.

குடல் என்ற சொல்லின் பொருளும் அதுதான். நம் உடலில் நடுவழித்துளை அமைந்த உறுப்பு குடல் என்று அறியப்படுகிறது. குழல் என்பதே குடல் ஆகியது.

“தமிழும் திராவிடமும் வேறு வேறா?” - மறுக்கும் கவிஞர் மகுடேசுவரன்!

புழல் என்ற சொல்லுக்கும் உள்துளை அமையப்பட்ட பொருள் என்பதே விளக்கம். புழல் என்பதே புடல் என்றாகியது. புடலை என்று ஒரு காய்க்குப் பெயர். புடலங்காயின் உட்புறம் உள்ளீடற்று இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

குழல் குடல் ஆகும்.
புழல் புடல் ஆகும்.
ழ என்னும் எழுத்து ட ஆகும்.
(அவ்வாறு ஒலிக்கப்படும்)

வகரம் மகரம் ஆவதை நாம் பேச்சு மொழியிலேயே காணலாம். வானம் மானம் என்று சொல்லப்படுகிறது.

அவ்வாறே மகரம் வகரம் ஆவதுமுண்டு. செம்மை என்பது செவ்வை ஆகும். மீசை என்பது வீசை ஆகும். வீசை என்ற சொல்லின் பொருளை அகராதியில் பாருங்கள். வீசை = மீசை என்றே காணப்படும்.

இவ்விளக்கங்கள் யாவும் நான் சொல்வதன்று. நூற்றாண்டுக்கு முன்னம் தமிழின் முதல் மொழிநூலை இயற்றிய மாகறல் கார்த்திகேய முதலியாரும் அவ்வாறே சொல்கிறார்.

மேற்சொன்ன இயல்புகளின்படி, தமிழ் என்பது தமிழம் என்று நிற்கையில் எவ்வாறு மாறும் ?

மி = வி
ழ = ட
மிழ = விட

மிழ என்பது விட என்று நிற்கும்.

த என்ற ஒலிப்பு பிறமொழியில் த்ர என்று ஆகும். பிறமொழி இயல்புகள் அவ்வாறு உள்ளன. தேகம் என்ற சொல் வடமொழியில் திரேகம் என்று ஆவது நல்ல எடுத்துக்காட்டு.

இப்போது மேற்சொன்னவற்றைத் தொகுத்துப் பாருங்கள்.

தமிழ = த்ரவிட

த்ரவிட என்பதனைத் தற்பவமாக்கித் திராவிட என்கிறோம். தமிழ் என்ற சொல்தான் திராவிடம் என்ற சொல்லின் வேர்.

தமிழ் = தமிழம் = த்ரவிடம் = திராவிடம்.

களத்திலுள்ள அரசியல் முரண்களைக் களங்கண்டே தீர்க. சொற்கள் அவற்றுக்குரிய தகைமைகளோடு எஞ்ஞான்றும் வாழும்.

- கவிஞர் மகுடேசுவரன்

banner

Related Stories

Related Stories