கவிஞர் கலாப்ரியா 1968 இல் கவிதைகள் எழுதத் தொடங்கியவர். இவரது கவிதைகள் 21 கவிதைத்தொகுதிகளில் வெளி வந்துள்ளன. இவை மட்டுமல்லாது நான்கு இலக்கியக்கட்டுரைகள், ஐந்து தன் வரலாற்றுப் புனைவுகள், இரண்டு தமிழ் சினிமா வரலாறுநூல்கள், ஒரு நாவல், ஒரு சிறுகதைத் தொகுப்பு என 34 நூல்கள் எழுதி இருக்கிறார்.
1970ல் கசடதபற இதழில் முதல் கவிதை வெளிவந்ததைத் தொடர்ந்து தமிழில் வெளிவந்த, வெளி வரும் அனைத்து இலக்கியப் பத்திரிகைகளிலும், வெகுசன இதழ்களிலும் நவீன இலக்கியத்தினை அவர் எழுதி வந்திருக்கிறார், தொடர்ந்து எழுதிக் கொண்டும் இருக்கிறார். 2009ல் பணி ஓய்வு பெற்ற பின் இலக்கிய உலகில் தீவிரமாக இயங்கி வரும் இவர் எழுதி 2017ல் வெளிவந்த முதல் நாவலான “வேனல்”பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழ் நாட்டின் பல பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும், சிங்கப்பூர் மலேசிய நாடுகளில் நடைபெற்ற கருத்தரங்குகள், கவிதைப் பட்டறைகளில், அந்நாட்டு அரசுகளின் அழைப்பின் பேரில் பங்கு பெற்று விரிவான கட்டுரைகள், பயிற்சிகள் வழங்கி உள்ளார்.
இவரது கவிதைகளை ஆய்வு செய்து பலர் முனைவர் (Ph.D), இளம் முனைவர் பட்டங்களும் (M.Phil) பெற்றுள்ளனர்.‘பதிவுகள்’ என்ற இலக்கிய அமைப்பினைத் தொடங்கி 1987 முதல்குற்றாலத்தில் எட்டு கவிதைப் பட்டறைகள், கருத்தரங்குகள் நடத்தியுள்ளார். அதில் பங்கு பெறாத தமிழ் ஆளுமைகளே அநேகமாக இல்லை எனலாம். அதன் மூலம் உருவான பல இளைஞர்கள் இன்று பிரபல எழுத்தாளர்களாகத் திகழ்கிறார்கள்.
இவரது ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகள் ஆங்கிலம், பிரெஞ்சு, இந்தி, தெலுங்கு, மலையாளம், வங்காளம், ஒரியா போன்ற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
இவரது கவிதைகள் தமிழ் நவீன கவிதை வரலாற்றில் ஒரு புறனடையாக விளங்கிப் பல இளையகவிகளுக்கு முன்னோடியாகத் திகழ்பவை. இவர் எழுதிய சுயம்வரம், எட்டயபுரம் போன்ற குறுங்காவியங்கள் பெரிதும் பேசப்பட்டவை. இவரது கவிதைகள் நம் வாழ்வின் அன்றாடக் காட்சிகளின் இனிமையைப் பாடுகின்றன. தற்குறிப்பேற்றம் என்னும் வண்ணம் கலந்து கற்பனைத் தூரிகையால் வரைந்த ஒவியங்கள் இவரது கவிதைகள்.
வெளிப்படையான தன் வரலாற்றுப் புதினங்கள் எழுதுவதில் இவரது ‘நினைவின் தாழ்வாரங்கள்’, ‘உருள்பெருந்தேர்’ ஆகியன மாபெரும் முன்னுதாரணங்களாகவும் புதிய பாணியைக் கட்டமைப்பதில் சிறந்தும் விளங்கி வருகின்றன. இதன் நீட்சியாக சமீபமாக இவர் எழுதி வரும் சிறுகதைகள் இவரது பன்முக ஆளுமைக்குச் சாட்சியம் கூறுபவையாக அமைந்துள்ளன.
தமிழக அரசின் கலைமாமணி விருதினை, கலைஞர் கையால் பெற்றவர். இதுதவிர, கலைஞர் விருதும், பொற்கிழியும் கலாப்ரியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய இலக்கியச் சூழலில் தன் சமகால இளையகவிகளின் படைப்புகளைக் குறித்துப் பேசும் சிற்சிலரில் கலாப்ரியாவும் ஒருவர். அவை இலக்கியக் கட்டுரைகளாகப் புத்தக வடிவிலும் வந்துள்ளன. பல புதிய படைப்பாளிகளின் நூல்களுக்கு, ஆலோசனை கலந்த முன்னுரை வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தி வருபவர் கலாப்ரியா.
இவர், அகில இந்திய எழுத்தாளர் பெருமன்றம், (Authors Guild of India New Delhi), Rotary Club of Courtallam Central, ஆகியவற்றின் உறுப்பினர். ரோட்டரி கிளப்பில்1999-2000 ஆண்டின் தலைவராக பணியாற்றியவர்.
இவரது இலக்கியப் பணியை பாராட்டி, புதுச்சேரியில் இளங்கவி அருள் தலைமையில் செயல்பட்டு வரும் மீறல் இலக்கியக் கழகம் வரும் 22ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) விழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது. லப்போர்த் வீதியில் உள்ள பி.எம்.எஸ்.எஸ் அரங்கில் காலை 10 முதல் நடைபெறும் விழாவுக்கு எழுத்தாளர் வண்ணதாசன் தலைமை தாங்குகிறார். சாகித்ய அகடாமி விருதுபெற்ற எழுத்தாளர் கி.ரா சிறப்பு வாழ்த்துரை வழங்குகிறார்.
எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், கவிஞர் இளங்கோகிருஷ்ணன், அந்திமழை இளங்கோவன் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டு கலாப்ரியாவுக்கு பாராட்டுரை வழங்குகின்றனர்.
முன்னதாக இந்த ஆண்டின் மீறல் இலக்கிய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. கவிஞர்கள் அ.வெண்ணிலா, பிரான்சிஸ் கிருபா, ஷாலின் மரியலாரன்ஸ் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த நிகழ்ச்சிக்கு கவிஞர் தேவேந்திரபூபதி தலைமை தாங்குகிறார். கவிஞர் பாலசுப்ரமணியன் நோக்கவுரை ஆற்றுகிறார்.