இந்தியாவில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில், தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் தபால் மூலம் வாக்களிப்பது வழக்கத்தில் உள்ளது. தற்போது தபால் ஓட்டு படிவம் 12D மூலம் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க இயலாதவர்கள் தபால் வாக்கு அளிக்கலாம் என்று திட்டத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கு எந்தவிதமான முன்னேற்பாடுகளும் கருத்துக் கேட்பு கூட்டங்களும் இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலமோ அல்லது அரசாங்கத்தின் மூலமோ நடத்தப்படாத நிலையில் தன்னிச்சையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த விவரம் மக்களுக்குத் தெரியாமலேயே பீகார் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
இதேபோன்ற தபால் ஓட்டு குளறுபடிகள், வரும் தேர்தல்களிலும் நடைபெற வாய்ப்புள்ளதால் மூத்த வழக்கறிஞர் பாக்கியராஜ் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில கேள்விகளை எழுப்பி அதற்கு பதில் கேட்டுள்ளார்.
80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தபால் வாக்கு அளிக்கலாம் என்பதை மக்களிடம் வெளிப்படையாக ஏன் அறிவிக்கவில்லை? இத்திட்டத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் கருத்துக் கேட்டதா அல்லது அரசாங்கம் கேட்டுள்ளதா?
இதுகுறித்து எப்போது விவாதிக்கப்பட்டது எத்தனை கூட்டங்கள் நடைபெற்றன? அதில் எத்தனை அதிகாரிகள் கலந்து கொண்டனர் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்திய தேர்தல் ஆணையம் இந்த கேள்விகளுக்கு, பதில்களை கண்டுபிடிக்க முடியவில்லை (Untraceable) என்று பதிலளித்துள்ளது.
இது தொடர்பாக தகுந்த தகவல்களை அளிக்காவிட்டால், பொதுநல வழக்கு தொடுக்கப்படும் என்று மூத்த வழக்கறிஞர் பாக்கியராஜ் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா முழுவதும் உள்ள 541 தொகுதிகளில் சுமார் 343 தொகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்கு வித்தியாசம் ஏற்பட்டுள்ளதாகவும் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையில் வித்தியாசம் ஏற்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வழக்கு தொடுத்து உள்ளதாகவும் இரண்டு ஆண்டுகளாகியும் அந்த வழக்கு கிடப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆகவே இதே போன்று பல்வேறு குளறுபடிகள் வரும் தேர்தல்களில் நடக்க வாய்ப்புள்ளதால் வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் நடைபெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விகளுக்கு ஜனநாயக கடமையை மறந்து, கண்டுபிடிக்க முடியவில்லை என்ற தகவலை அளித்த இந்திய தேர்தல் ஆணையம், சுயநலத்துடன் ஒருசார்பாக செயல்படுவதாக மூத்த வழக்கறிஞர் பாக்கியராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.