குஜராத் மாநிலம், அகமதாபாத்தை சேர்ந்தவர் ஷிலாஜில் (வயது 41). இவர் அந்த பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இவரின் வீட்டில் 19 வயது இளம்பெண் ஒருவர் வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.
இவர் தங்கியிருந்தது புதிய குடியிருப்பு என்பதால், அங்கு சில குடும்பங்களே இருந்துள்ளனர். இதனை பயன்படுத்திய ஒரு கும்பல் ஷிலாஜில் வீட்டில் திருட முடிவு செய்துள்ளனர். அதன்படி நள்ளிரவு அந்தப் பெண்ணின் வீட்டின் மின்சார இணைப்பை துண்டித்துள்ளனர்.
இதன் காரணமாக ஷிலாஜில் வீட்டை விட்டு வெளியே வந்தபோது தயாராக காத்திருந்த கும்பல், ஷிலாஜிலின் முகத்தை பொத்தி, வீட்டுக்குள் இழுத்துச்சென்றுள்ளனர். அப்போது அந்த வீட்டில் வேலை செய்துவந்த 19 வயது இளம்பெண்ணை கண்ட அந்த கும்பல் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.
பின்னர் அங்கிருந்து 14,000 ரூபாய் பணம், லேப்டாப், ஏ.டி.எம் கார்டு போன்றவற்றைத் திருடி அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளது. மேலும், ஏ.டி.எம் கார்டு மூலம் 40,000 ரூபாயையும் அந்த கும்பல் எடுத்துச்சென்றுள்ளது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, பஞ்சாப்புக்கு பேருந்தில் தப்பிச் செல்ல முயன்ற அந்த கும்பலை சேர்ந்த 5 பேரையும் போலீஸார் கைதுசெய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பஞ்சாபை சேர்ந்த மஞ்சித் சிங் என்பவர் தனது திருமண செலவுகளுக்காக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தனது கூட்டாளிகள் 4 பேரோடு சேர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. திருமண செலவுக்காக மாநிலம் விட்டு மாநிலம் வந்து திருடிய கும்பலின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.