உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் உபேந்திர ராகவ். இவருக்குப் பல்லியா மாவட்டத்தைச் சேர்ந்த கோமல் பாண்டே என்ற பெண் செல்போன் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் பேசி பழகிவந்துள்ளனர்.
இதையடுத்து சிறிது நாட்கள் கழித்து கோமல் பாண்டே, வெராணிகா என்ற பெண்ணை உபேந்திர ராகவிற்கு அறிமுகம் செய்துள்ளார். அப்போது அவர் தான் பிரதமர் மோடியின் மருமகள் என கூறியுள்ளார்.
மேலும் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என அவரை நம்பவைத்துள்ளார். உங்கள் பெயரில் தான் முதலீடு செய்து பணத்தை அதிகப் படுத்தித் தருவதாகவும் கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பியுள்ளார் உபேந்திர ராகவ்.
பின்னர் அவரை தொடர்பு கொண்ட வெரோணிகா பணத்தை முதலீடு செய்ய ரூ.21 லட்சம் பணத்தைத் தனது நண்பர் ரமேஷ் சர்மா என்பவர் வங்கிக்கு அனுப்பும் படி கூறியுள்ளார். இதையடுத்து உபேந்திர ராகவும் அவர் கூறியதுபோன்றே பணத்தை வங்கியில் அனுப்பியுள்ளார்.
இதையடுத்து முதலீடு செய்த பணம் என்ன ஆனது என கேட்டுள்ளார். அப்போது அவர் ரூ.18 லட்சத்திற்குப் போலியாக ஒரு செக்கை தயார் படுத்தி அதை வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பியுள்ளார். பிறகு வெராணிகா தொடர்பு கொண்டுள்ளார்.
ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர்தான் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதமர் மோடியின் பெயரைப் பயன்படுத்தி ரூ.21 லட்சம் பெண் ஒருவர் மோசடி செய்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.