தனக்கு இன்னும் திருமணம் செய்துவைக்கவில்லை என்று ஆத்திரப்பட்ட இளைஞர் ஒருவர், தனது தாயை கொலை செய்துள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்தவர் அஸ்மா. 67 வயதுடைய இவர், ஓய்வு பெற்ற ஒரு ஆசிரியர் ஆவார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், அதில் மூத்த மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
தற்போது இவர் இரண்டு மகன்கள், மற்றும் மூத்த மருமகளுடன் வாழ்ந்து வரும் நிலையில், இவரது இரண்டாவது மகன் அப்துல் அஹத் பரான் என்பவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். மேலும் தனது செலவுக்கு தாய் மற்றும் சகோதரனிடம் இருந்து பணம் வாங்கிக்கொண்டு நண்பர்களுடன் அரட்டையடித்து ஊர் சுற்றுவதுமாக இருந்து வந்துள்ளார்.
இதனால் இவருக்கும் தாய்க்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் அப்துலை திருமணம் செய்ய யாரும் முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த கோபத்தில் இருந்த அப்துல், சம்பவத்தன்று அண்ணன் - அண்ணி வீட்டில் இல்லாத நேரத்தில் தாயிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது அவர் கொடுக்க மறுக்கவே இருவருக்கும் இடையே சண்டை வலுத்துள்ளது.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் தனக்கு இன்னும் ஏன் திருமணம் செய்து வைக்கவில்லை என்றும் அப்துல் தனது தாயிடம் சண்டையிட்டுள்ளார். அப்போது கோபத்தில் தாயை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த தாய் சம்பவ இடத்திலேயே மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.
அந்த சமயத்தில் எதேர்ச்சியாக வெளியே சென்றிருந்த அண்ணன் - அண்ணி வந்து பார்க்கும்போது தாய் அடிபட்டு கீழே கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே தாயை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து தாயின் உடலை உடற்கூறாய்வு செய்ததில் இவரது மரணம் சந்தேகத்திற்குரிய வகையில் இருப்பதாக தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அப்துலின் பதில் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்துள்ளது. பின்னர் அவரிடம் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.