இந்தியா

“மத்திய சட்டப் பல்கலைக்கழகங்களில் ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை மறுப்பதா?” - டி.ஆர்.பாலு எம்.பி கடிதம்!

மத்திய சட்டப் பல்கலைக்கழகங்களில் ஓ.பி.சி இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற தி.மு.க குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மத்திய சட்டப் பல்கலைக்கழகங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளதாக, தி.மு.க பொருளாளரும் - நாடாளுமன்ற தி.மு.க குழு தலைவருமான டி.ஆர்.பாலு எம்.பி., மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

நாடாளுமன்ற தி.மு.க குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி இன்று எழுதிய கடிதம் வருமாறு :

“தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் 2020-21 ஆம் ஆண்டுக்கான, மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கையில், சட்டப் படிப்புக்கும், சட்ட மேற்படிப்புக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படாமல், இட ஒதுக்கீட்டுக் கொள்கை அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. மத்திய கல்வி நிறுவனங்கள் இட ஒதுக்கீட்டுச் சட்டம் 2000-ன் படி, மாணவர்களுக்கான சேர்க்கையிலும், ஆசிரியர்களின் வேலைவாய்ப்பிலும் அனைத்துப் பல்கலைக்கழகங்களும் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென பல்கலைக்கழக மானியக் குழு உறுதிப்படுத்தியுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டளையை, 13 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் முற்றிலுமாக மீறியுள்ளன.

தமிழ்நாட்டில் அமைந்துள்ள திருச்சி உள்ளிட்ட தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் பி.ஏ, எல்.எல்.பி ஐந்து வருடப் படிப்புக்கான 130 இடங்களில், பொதுப் பிரிவினருக்கு 93 இடங்களும், பட்டியலினத்தோருக்கு 18 இடங்களும், பழங்குடியினருக்கு 9 இடங்களும் நிரப்பப்படும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு முற்றிலுமாக, பெங்களூரு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள 13 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் 1,605 சட்டப் படிப்புக்கான இடங்களும், 415 சட்ட மேற்படிப்புக்கான இடங்களும், இந்தக் கல்வியாண்டில் (2020-2021) நிரப்பப்படவுள்ளன. டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகம், பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதத்திற்குப் பதிலாக 22 சதவீதம் மட்டுமே வழங்க திட்டமிட்டுள்ளது.

தி.மு.க பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இயற்றப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை மீறும் தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் மீது, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, ஜூன் 2020-ல் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் கட்டளை பிறப்பித்துள்ளார்.

ஏற்கெனவே, 2019 ஜூன் மாதத்தில், இட ஒதுக்கீடு வழங்காத ஐதராபாத் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“மத்திய சட்டப் பல்கலைக்கழகங்களில் ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை மறுப்பதா?” - டி.ஆர்.பாலு எம்.பி கடிதம்!

மத்திய கல்வி நிறுவனங்கள் இட ஒதுக்கீட்டுச் சட்டம் 2006-ன்படி அனைத்து இந்திய இடங்களில், 27 சதவீத பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டையும், மாநில இடங்களில், அந்தந்த மாநில ஆணைகளின்படியும், தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள், 2020 ஆண்டு முதல் பின்பற்ற வேண்டுமென, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் கட்டளை பிறப்பித்துள்ளார்.

தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கையில், இட ஒதுக்கீடு தொடர்பாக நடைபெறும் விதிமீறல்களை நீக்க, பல்கலைக்கழக மானியக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இதுகுறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான ஆதாரங்களை உடனடியாக அளிக்க வேண்டுமெனவும், 2019 ஆம் ஆண்டு வரையிலும், பல்கலைக்கழக மானியக் குழுவின் இட ஒதுக்கீட்டு ஆணைகளை மீறிய பல்கலைக்கழகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கட்டளை பிறப்பித்துள்ளது.

எனவே, மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உடனடியாகத் தலையிட்டு, மத்திய கல்வி நிறுவனங்கள் இட ஒதுக்கீட்டு சட்டம் 2006-ன்படி அனைத்து தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களும் சட்டப் படிப்பிலும் சட்ட மேல் படிப்பிலும் அனைத்து இந்திய இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடங்களையும், மாநில இடங்களில், அந்தந்த மாநிலங்களின் ஆணைப்படியும் இந்தக் கல்வியாண்டிலேயே (2020-2021) இட ஒதுக்கீட்டுக் கொள்கை பின்பற்றப்பட ஆவன செய்ய வேண்டும்”

இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories