பிப்ரவரி 14, 2019 காஷ்மீரின் புல்வாமா மாகாணத்தில் இந்திய இராணுவத்தின் மீது ஒரு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. 40 பேரைப் பலி கொண்ட இந்த தாக்குதலுக்குக் காரணமானவர் 19 வயது இளைஞர் அஹமத் டார். அஹமத் டாருக்கு, அப்படி என்ன காரணங்கள் இருக்கக்கூடும் இப்படி ஒரு தற்கொலைப்படை தாக்குதலை நடத்தும் அளவுக்கு என்ற கேள்விக்கான பதில் அவரது பெற்றோரிடமிருந்து நமக்குக் கிடைத்தது.
2016ம் ஆண்டு இந்திய இராணுவத்தினர் தகாத சொற்களால் திட்டியும், அதே ஆண்டு இளைஞர்கள் மேற்கொண்ட போராட்டத்தில் இந்திய இராணுவத்தினர் சுட்டதில் காலில் ஒரு தோட்டாவையும் வாங்கிய இந்த இளைஞனைத் தீவிரவாதம் இரு கைகளை விரித்து இழுத்துச் சென்றிருக்கிறது சாவை நோக்கி. இப்படி எல்லாப் பக்கமும் இராணுவம் சூழ்ந்திருக்கும் காஷ்மீரின் இளைஞர்களில் பலர் மனச்சோர்வுக்கு ஆளாகி இருப்பதாகச் சொல்கின்றன ஆய்வுகள்.
70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா, பாகிஸ்தான் என்னும் இரு நாடுகள் நடத்திய மூன்று போர்களையும், மூலை முடுக்குகளில் 50,000க்கும் மேற்பட்ட இந்திய இராணுவத்தினரையும் தாங்கி நிற்கிறது காஷ்மீர். ஆகஸ்ட் 5, 2019 இந்தியாவின் ஜனநாயகத்தைத் தட்டிப் பார்த்திருக்கும் நாள்! காஷ்மீரின் தலைவர்களை வீட்டுப்பாதுகாப்பிலும், மக்களை 144 தடையின் பேரால் அவரவர் வீடுகளிலும், காஷ்மீரை உலகத்தின் எல்லா தொலைத்தொடர்புகளிடமிருந்தும் ஒளித்துவைத்தது, இந்தியாவை ஆண்டு வரும் பா.ஜ.க அரசு.
ஒரு பக்கம் காஷ்மீரில் என்ன நடக்கிறது என்ற பதற்றம் அதிகரித்துக்கொண்டிருக்க, எந்தப் பதற்றமும் இன்றி மாநிலங்களவையில் அமித்ஷா சில வார்த்தைகளை உதிர்த்தார் "காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்படுகிறது" என்பதே அது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது. 28 மாநிலங்களும், 9 யூனியன் பிரதேசங்களும் கொண்ட நாடாக மாறியது இந்தியா. இனி காஷ்மீரில் இடம் வாங்கலாம் என்றும், இதனால் காஷ்மீரி பண்டிட்களுக்கு நியாயம் கிடைத்திருப்பதாகவும், பா.ஜ.கவின் 70 ஆண்டு கனவு நனவானதாகவும் கொண்டாடப்படும் இந்த நிகழ்வுக்கும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்கப் படைவீரர்களுக்கும் தொடர்பிருக்கிறது என்றால் நம்புவது கடினமாகவே இருக்கும்.
ஆனால் அரசியல் எப்போதும் சராசரி மனிதர்களின் யோசனைக்கு அப்பாற்பட்டது என்பதை ஊர்ஜிதம் செய்யும் மற்றொரு நிகழ்வு தான் இது. ஜனவரி 3, 2018ல் துவங்கியது இப்போது இந்திய நாடாளுமன்றத்தில் அரங்கேறியிருக்கும் இந்த நாடகம். ஆம், ஆப்கானிஸ்தான் விஷயத்தில் பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுவதாகவும், அதனால் பாகிஸ்தானுக்குக் கொடுக்கப்பட்டு வந்த உதவிகள் இனி நிறுத்தப்படும் எனவும் ஒரு ட்வீட் செய்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இதைத் தொடர்ந்து மூண்டது இரு நாடுகளுக்குமான வாக்குவாதம்.
9/11 என்று அழைக்கப்படும் இரட்டை கோபுர தகர்ப்புக்குப் பின்னர் ஒசாமா பின்லேடனை தேடி ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தன அமெரிக்க, பிரிட்டன் மற்றும் கூட்டு நாடுகளின் படைகள். இப்போது 18 வருடங்கள் கழித்தும் 14,000 படை வீரர்களை ஆப்கானிஸ்தானில் குவித்து வைத்திருக்கிறது அமெரிக்கா. நாட்டின் பொருளாதார பளு இதனால் கூடுவதாகவும், இத்தனை வருடங்கள் கழித்து இன்னும் அமெரிக்கா படைகளைத் திரும்பப் பெறாதது ஏன் எனவும் அமெரிக்க அரசியலில் குரல்கள் எழத் துவங்கின.
ட்ரம்ப்பின் ஆட்சிக்காலம் நவம்பர் 2020ல் முடியும் நிலையில் அடுத்த முறையும் ஆட்சியைப் பிடிக்க இந்த கேள்விக்கான பதிலை அவர் கொடுக்கவேண்டிய நிலையில் இருக்கிறார். இதனால் துவங்கப்பட்டது தாலிபான்களுடனான அமைதிப் பேச்சு வார்த்தை. அமைதிப் பேச்சுவார்த்தையின் முடிவில் 2020க்கு முன்னர் 14,000த்தில் இருந்து 8,000 அல்லது 9,000மாக இந்த படைகள் குறைக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார் அமெரிக்காவின் மாநிலச் செயலாளர் மைக் போம்பேவ். இந்த அமைதிப் பேச்சுவார்த்தை தான் பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் உறவை மீட்டுருவாக்கம் செய்தது.
பாகிஸ்தான் இராணுவத்தின் பேராதரவுடன் கடந்த 2018ம் ஆகஸ்ட் மாதம் பிரதமரானார் இம்ரான்கான், இவரைப் பிரதமராக்கியதில் பெரும் பங்கு பாகிஸ்தானின் இராணுவ தலைவர் உமர் ஜவாத் பஜ்வாவுக்கு உண்டு. உமரின் ஆட்சிக்காலம் முடிய இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில், ராணுவத்தின் உதவி மற்றும் அமெரிக்காவிலிருந்து வரும் நிதி இரண்டும் இம்ரான்கானின் ஆட்சி நீடிக்க தேவையானவையாக இருக்கிறது.
இந்நிலையில் தான் நிகழ்ந்தது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மற்றும் ராணுவ தலைவர் உமரின் அமெரிக்கப் பயணம். கடந்த ஜூலை 22 மற்றும் 23ம் தேதி அமெரிக்கத் தலைவர் ட்ரம்ப்பை இவர்கள் சந்தித்த பின்னர், ஆப்கானிஸ்தானோடு 2,400 மைல்கள் எல்லையைப் பகிர்ந்திருக்கும் பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புதலோடு, இனி அமைதி பேச்சுவார்த்தைகள் முழு வீச்சில் துவங்கும் என்ற வெள்ளை மாளிகையின் அறிக்கை வெளியானது.
பாகிஸ்தானின் ஒத்துழைப்புக்கு ஏற்றாற்போல நிதியுதவி அளிக்கப்படும் என்று வெளிப்படையாகவே சொன்னார் அமெரிக்க குடியரசுத் தலைவர் ட்ரம்ப். இன்னும் அச்சடிக்கப்படாத, கோப்புகளில் இல்லாத இந்த பேச்சுவார்த்தைகள் ஆப்கானிஸ்தானில் பெரும் சிக்கலை உருவாக்கி இருப்பதென்பது உண்மை. 17 ஆண்டு காலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களால் ஆளப்பட்டு வந்த ஆப்கானிஸ்தானில் இப்போது பெண் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்கிறார்கள், கல்லூரிக்குச் செல்கிறார்கள், நாடு முன்னேறி இருக்கிறது, தாலிபான்களின் ஆட்சி வந்தால் இங்கு பெண்கள் யாரும் தெருவில் நடக்கக்கூட முடியாத நிலை உருவாகும் என்று வருத்தத்துடன் எதிர்ப்புக் குரல்களைப் பதிவு செய்கிறார் அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினரும், ஹஜாரா சிறுபான்மையினர் இனக்குழுவின் குரலாகவும் இருக்கும் ரிஹானா ஆசாத்.
இந்த உலக அரசியல் நாடகத்தின் உட்காட்சியாகத்தான் நடந்தேறியது, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட இந்திய நிகழ்வும். இனி காஷ்மீருக்குள் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம், இனி உலகின் எந்த பகுதியிலிருந்து வந்தாலும் பெரு முதலாளிகளுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுப்பதற்குக் காத்துக்கிடக்கிறார்கள் இந்தியாவின் தொழில் துறையைக் கையில் வைத்திருக்கும் பனியாக்கள்.
காஷ்மீரி பண்டிட்களுக்கு நியாயம் கிடைத்துவிட்டதாகவும், காஷ்மீரில் நிலம் வாங்கப்போவதாகவும் இன்று களிப்படைவோர் வாக்கு வங்கிகளாக மாறிப்போனவர்கள். இதனால் வளர்வது சிறுபான்மையினருக்கு எதிரான மனோநிலையும், பாழ்பட்டுப் போவது 70 ஆண்டுகளாகக் காக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பற்ற தன்மையுமே ஆகும். இந்த அரசியலமைப்புச் சட்டம் வலதுசாரி, இடதுசாரி, சோசியலிச, ஜனநாயக, பூர்ஷ்வா, நிலப்பிரபுத்துவ எண்ணம் கொண்ட எல்லோராலும் சேர்த்தே உருவாக்கப்பட்டது, ஆனாலும் இதில் முற்போக்குத் தன்மை இருந்தது தான் முக்கியமானது.
உலகின் எல்லா அரசியலும் குரலற்றவர்களின் குரலை இன்னும் ஒடுக்கவும், நிலம், உடல், மொழி, வரலாறு என்று சிறுபான்மையினரைச் சுரண்டவும் மட்டுமே உபயோகிக்கப்படுகிறது. இந்த சுரண்டல்களின் துவக்கம் எங்கோ ஒரு குளிரூட்டப்பட்ட அறையில், அடுத்த முறையும் பதவியைப் பிடிக்க வேண்டும் என யோசிக்கும் அரசியல்வாதிகளின் எண்ணங்களிலிருந்தே துவங்குகிறது, பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் எங்கோ ஒடுக்கப்படும், துப்பாக்கி முனையில் கொல்லப்படும், கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு குருடாக்கப்படும் இனம் என் இனம் இல்லை, மக்கள் எம் மக்கள் இல்லை, நான் கேள்வி கேட்கவோ குரல் எழுப்பவோ தேவையில்லை என்ற உணர்வே மனித இனத்தின் அழிவின் முதல் காரணி.
“முதலில் அவர்கள் யூதர்களுக்காக வந்தார்கள்
நான் பேசவில்லை
ஏனென்றால், நான் யூதனில்லை
பிறகு கம்யூனிஸ்ட்டுகளுக்காக வந்தார்கள்
நான் பேசவில்லை
ஏனென்றால், நான் கம்யூனிஸ்ட் இல்லை
அடுத்து தொழிற்சங்கவாதிகளுக்காக வந்தார்கள்
நான் பேசவில்லை
ஏனென்றால், நான் தொழில்சங்கவாதியில்லை
பிறகு அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள்... எனக்காகப் பேசுவதற்கு யாரும் உயிரோடில்லை!”
நாசிகளின் படையில் ஒரு அங்கமாய் இருந்து கடைசியில் வேட்டையாடப்படுவதற்கு முன்பு தன் தவறை உணர்ந்த கவிஞர் மார்ட்டின் நெமல்லரின் மேற்கண்ட வரிகளோடு இக்கட்டுரையை முடிக்கிறேன்.
- சௌமியா ராமன்