தி.மு.க

“கழகத்தின் வெற்றி ஜனநாயகத்தின் வெற்றி” - உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!

சமூகநீதிக்கான போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ளார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.

“கழகத்தின் வெற்றி ஜனநாயகத்தின் வெற்றி” - உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நேற்று தமிழகம் முழுக்க, தி.மு.க இளைஞரணி சார்பில், குடியுரிமை மசோதாவை நிறைவேற்றிய பா.ஜ.க அரசையும், ஆதரவளித்த அ.தி.மு.க அரசையும் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு கைதானார்.

விடுவிக்கப்பட்ட பிறகு, ஆர்ப்பாட்டம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின். அதில், “இந்திய அரசியலமைப்பின் அடித்தளங்களில் ஒன்று ‘மதச்சார்பின்மை. ஆனால் அந்த அடித்தளத்தைப் பலவீனப்படுத்தும் வகையில் மத்திய அரசு குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை இரு அவைகளிலும் நிறைவேற்றியிருக்கிறது. இதன்மூலம், புலம்பெயர்ந்து வந்து இரண்டு மூன்று தலைமுறைகளாக இந்தியாவில் வாழும் இஸ்லாமியர் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு இங்கு இடமில்லை என்கிற அநீதிக்கு வித்திட்டுள்ளது மோடி அரசு.

இப்படியான மக்கள் விரோத மசோதாக்களை எதிர்த்து, ஜனநாயகப் போரை முன்னின்று நடத்திக்கொண்டிருக்கும் தி.மு.கழகத்தின் தலைவர் அவர்கள் இளைஞரணிக்கு வழங்கிய உத்தரவின்படி, குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றிய பா.ஜ.க, அதற்குத் துணைபோன அடிமை அ.தி.மு.க அரசுகளை எதிர்த்து, எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை இன்று தமிழகம் முழுவதும் நடத்தினோம்.

இது, எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி, முரசொலியில்கூட தகவல் தரப்படாமல், தலைவர் அவர்கள் முதல்நாள் அழைத்து இட்ட உத்தரவின்படி மறுநாள் நடத்தப்பட்ட போராட்டம். ஆனால் ஏதோ நீண்டநாள் திட்டமிட்டு நடத்தியதுபோன்று தமிழகம் முழுவதும் அப்படியொரு எழுச்சி.

“கழகத்தின் வெற்றி ஜனநாயகத்தின் வெற்றி” - உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!

தமிழினத்திற்காக ஓய்வில்லாமல் உழைத்த முத்தமிழறிஞர் கலைஞரின் பெயரில் அமைந்துள்ள சைதாப்பேட்டை பொன் விழா வளைவுதான், ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட ஆர்ப்பாட்டக் களம். இதில் இளைஞரணி-மாணவரணியைச் சேர்ந்த துடிப்புமிகு தம்பிமார்கள், மகளிரணியைச் சேர்ந்த பாசமிகு தாய்மார்கள், கொள்கை வழி நிற்கும் கழக நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை எழுச்சிமிக்கதாய் மாற்றினர். குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியும், அதன் நகல்களைக் கிழித்தும் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.

‘உதயநிதி தலைமையிலான போராட்டம்’ என்று அப்போது குறிப்பிட்டனர். ஆனால், அங்கு வந்திருந்த ஒவ்வொருவரின் தலைமையில் நான் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம்’ என்று சொன்னால் அது மிகையாகாது. கட்டுக்கடங்காத கூட்டத்தைக் கண்ட காவல்துறையினரே என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

“கழகத்தின் வெற்றி ஜனநாயகத்தின் வெற்றி” - உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!

ஆர்ப்பாட்டத்துக்கு வந்த இளைஞர்களைச் சிதறடித்து, போராட்டத்தின் மீது மக்களின் கவனம் விழாமல் செய்யவேண்டும் என்பதிலேயே காவல்துறையினர் முனைப்பாக இருந்தனர். பாவம், அவர்கள் என்ன செய்வார்கள், அடிமை அரசின் உத்தரவின்படி வேலை செய்கிறார்கள்.

காவல்துறையின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் உக்கிரமாக, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது சில தம்பிமார்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். ‘என் தம்பிகளைத் தாக்கினால் சாலை மறியல் செய்வேன்’ என்று அண்ணா சாலையில் அமர்ந்தேன். ‘கைது செய்வோம்’ என்றனர். “தாராளமாகக் கைது செய்துகொள்ளுங்கள்’ என்றேன்.

“கழகத்தின் வெற்றி ஜனநாயகத்தின் வெற்றி” - உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!

ஆனாலும் கைதானவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்ட முயன்றனர். அதற்காக அங்கிருந்தவர்களில் என்னையும் சேர்த்து நூற்றுக்கணக்கானோரை மட்டும் முதலில் இரண்டு பேருந்துகளில் ஏற்றிக்கொண்டு மற்றவர்களை இரும்பு தடுப்புக்குள் தடுத்து வைத்தனர். நாங்கள் ஏதோ சென்னைக்குப் புதிது போலவும், ஊர் சுற்றிக் காட்டுவதுபோலவும் சின்னமலை வழியாக சைதாப்பேட்டையை இரண்டுமுறை வலம் வந்தனர். இந்த அலைக்கழிப்புக்குள் இரும்பு தடுப்புக்குள் உள்ள தம்பிமார்கள் கலைந்துபோய்விடுவார்கள் என்பது காவல்துறையின் நம்பிக்கை.

இதற்கெல்லாம் அஞ்சுபவர்களா முத்தமிழறிஞர் கலைஞரின் உடன்பிறப்புகள்... கடைசிவரை தொண்டர்கள் எண்ணிக்கை மட்டும் குறையவேயில்லை. பிறகு ஒருவழியாக அனைவரையும் ஒய்.எம்.சி.ஏ மைதானத்துக்கு அழைத்துச்சென்று தங்க வைத்தனர். இந்த அலைக்கழிப்பு என்பது எங்களுக்கானதல்ல, இந்திய துணைக்கண்ட மக்களின் மனதில் மிச்சம் மீதி இருக்கும் ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட அலைக்கழிப்பு.

தன்னெழுச்சியாக நடந்த போராட்டத்தில் கைதானவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் கழகத்தினரே செய்திருந்தனர். கைதான பலருக்கும் நானே கைப்பட உணவு பரிமாறினேன். பிறகு அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினேன். தடியடி, அலைக்கழிப்பு, பல மணி நேர காத்திருப்புக்குப் பிறகு மாலை 6 மணிக்கு விடுதலை செய்யப்பட்டோம். கைதான அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டு இல்லம் திரும்பினேன்.

அப்போது என் மனதில், வார்த்தைகளில் விளக்கிடமுடியாத எண்ணங்கள். எவ்வளவு கட்டுக்கோப்பான இயக்கம், அஞ்சாத இளைஞர்கள்’ என்ற பெருமிதம். நான் இளைஞரணியின் செயலாளராகப் பொறுப்பேற்று நடைபெற்ற முதல் கைது, ஜனநாயகம் காக்கும் வகையில் மக்கள் விரோத சட்டத் திருத்தத்துக்கு எதிராக அமைந்ததில் பெறும் மகிழ்ச்சி.

இந்த நல்ல வாய்ப்பைத் தந்த கழகத் தலைவர் அவர்களுக்கும், ஆர்ப்பாட்டத்துக்கான களம் அமைத்துத் தந்த அனைத்து மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும், நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த கழகப் பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுக்கும், அனைத்து அணிகளை சார்ந்தோருக்கும், அமைப்பாளர்கள் உள்ளிட்ட இளைஞரணி தம்பிமார்களுக்கும், ஊடகங்களைச் சேர்ந்தவர்களுக்கும், ‘சரியாக கடமையாற்றிய’ காவல்துறையினருக்கும் இந்த சமயத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் வெற்றி தனித்த உதயநிதிக்கான வெற்றியோ, இளைஞரணிக்கான வெற்றியோ அல்ல, கழகத்தின் வெற்றி. ஆம், கழகத்தின் வெற்றிதான் ஜனநாயகத்தின் வெற்றி.

தலைவர் அவர்கள் உத்தரவிடும் சமூகநீதிக்கான இதுபோன்ற போராட்டங்களைத் தொடர்ந்து நடத்திட இளைஞரணி தம்பிமார்கள் தயாராக இருக்கிறோம் என்பதையும் இந்நேரத்தில் கூறிக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞரின் புகழ் ஓங்குக. வாழ்க கழகத் தலைவர்!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories