தி.மு.க இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாமை இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட டாக்டர் தாமஸ் சாலை குடிசைமாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தில் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வின்போது தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ. அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம், சென்னை மேற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சிற்றரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், “நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தலைவர் மு.க.ஸ்டாலின் பேனர்களை தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளார். பேனர் வைக்கும் கலாச்சாரத்தை முற்றிலுமாக ஒழிப்போம்.” என்றார்.
மேலும் பேசிய அவர், “இந்தி மொழியை எதிர்க்கமாட்டோம்; இந்தி திணிப்பை நாங்கள் கண்டிப்பாக எதிர்ப்போம். 5ம் வகுப்பு எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்பது ஏற்கமுடியாது ஒன்று.” எனத் தெரிவித்தார்.
இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை குறித்துப் பேசிய உதயநிதி, “இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இளைஞரணியில் இணைய வந்துள்ளனர். 30 லட்சம் பேரை சேர்ப்பதை இலக்காகக் கொண்டு பணியாற்றி வருகிறோம்.” என்றார்.