கொரோனா தொற்று பரவலை எதிர்கொள்ளும் வகையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள அவசர ஆக்சிஜன் படுக்கை வசதிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வுசெய்தார். அங்குள்ள சிறப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு, மருத்துவக்கல்லூரி டீன் சாந்தி ஆகியோர் உடனிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, "தமிழகத்தில் டிசம்பரில் 100ல் ஒருவருக்கு என்கிற விகிதத்தில் இருந்த இறப்பு விகிதம், தற்போது 1000ல் ஒருவர் என்கிற விகிதத்தில் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.
2வது அலையின் போது 500 மெட்ரிக் டன் என்கிற அளவில் இருந்த ஆக்சிஜன் தேவை, தற்போது 117 மெட்ரிக் டன் அளவு மட்டுமே தேவை என்கிற அளவில் குறைந்துள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஆறுதல் அளிக்கும் விசயமாக கொரோனா பரவல் வேகம் குறைந்துள்ளது. கொரோனா கால விதிமுறைகளை மக்கள் பின்பற்றியதே காரணம்.
2ஆம் அலைக்கும் 3ஆம் அலைக்கும் இடையிலான வித்தியாசமாக, 1.31 லட்சம் கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் உள்ள நிலையில், அதில் 9% மட்டுமே நிரம்பி உள்ளது. தடுப்பூசி போடாதவர்களுக்கும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை சரியான நேரத்தில் போடாத 60 வயதை கடந்தவர்கள் மட்டுமே உயிரிழக்கும் நிலை உள்ளது.
சென்னையில் பரிசோதனை செய்யப்படும் 100ல் 30 பேருக்கு மட்டுமே தற்போது கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களில் பரவல் வேகம் குறைந்துள்ளது. மாதவரம், மணலி, திருவெற்றியூர், சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் பரவல் வேகம் குறிப்பிடும் அளவு உள்ளது.
தொற்று பரவல் தானாக ஏறி, தானாக குறையும் என்ற தகவல் சரியானது அல்ல. அப்படி வலைதளங்களில் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுப்பதால் மட்டுமே தொற்று வேகம் குறைகிறது. வல்லுனர்களின் கருத்தும் அது தான். இதனை பின்பற்ற முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.
சென்னையில் கொரோனா பரவல் குறைவது போல மற்ற மாவட்டங்களிலும் பரவல் குறைய நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து பணிகள் நடைபெறுகிறது.
சென்னையில் கொரானா தாக்கம் உயர்ந்து தற்போது இறங்கியுள்ளது, இருப்பினும் சோழிங்கநல்லூர் மணலி, அம்பத்தூர் மாதவரம் ஆகிய மண்டலங்களில் தொற்றை குறைப்பதில் சவாலாக உள்ளதாக தெரிவித்தார்.
சென்னையை பொருத்தவரை தொற்று குறைவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக முக்கிய காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோன்று மற்ற மாவட்டங்களிலும் கொரானா தாக்கம் இறங்குமுகமாக இருந்தால் மட்டுமே கர்நாடகவை போன்று வார இறுதி நாள் ஊரடங்கை கைவிடுவது பற்றி முடிவெடுக்க முடியும் என்று தெரிவித்தார்.