தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தனியார் ஆய்வகங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் உள்ள தனியார் கொரோனா ஆய்வகங்களில் வெளியாகும் முடிவுகளின் தரவுகளை சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஒமைக்ரான் வகை பாதிப்புகளும் பரவி வரும் சூழலில் ஆய்வக பணியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு உடைகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கொரோனா பரிசோதனையை முறையாக மேற்கொள்வதுடன் முடிவுகளை உடனுக்குடன் ஐசிஎம்ஆர் வலைதளம் மற்றும் சுகாதாரத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை மட்டுமே ஆய்வகங்கள் வசூலிக்க வேண்டும்.
குறிப்பாக அரசின் சார்பில் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் 400 ரூபாயும் , காப்பீடு திட்டம் அற்றவர்களுக்கு 700 ரூபாயும் , வீட்டிற்கு சென்று பரிசோதனை செய்ய கூடுதலாக 300 ரூபாயும் சேர்த்து வசூலிக்க கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் தனியார் ஆய்வகங்கள் அரசின் குறிப்பிட்ட இந்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும்.
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆய்வகங்கள் மீது சுகாதாரத் துறையின் சார்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தனியார் ஆய்வகங்களுக்கு பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் தனியார் ஆய்வகங்கள் வழங்கக்கூடிய தரவுகளின்படி கொரோனா பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சை மற்றும் தேவையான நோய் தடுப்பு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் மேற்கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத்துறை சார்பில் மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு வலியுறுத்தபட்டுள்ளது.