சென்னை சைதாப்பேட்டை மேற்கு பகுதியில் 17வது மெகா தடுப்பூசி முகாமையும், சைதாப்பேட்டை மேற்கு பகுதி மற்றும் அப்பல்லோ மருத்துவமனை இணைந்து நடத்திய மழைக்கால சிறப்பு இலவச மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது,
“தமிழ்நாட்டில் 86.12 % முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 58.82 % இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 91% முதல் தவணையும், 69% இரண்டாம் தவணையும் செலுத்தப்பட்டுள்ளது. மாநில அளவை விட சென்னையில் அதிக தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் 5 லட்சம் பேருக்கு மேல் சென்னையில் இன்னும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்படாமல் உள்ளது.
சுனாமி அலைக்கு சமமாக உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது இந்த டெல்டா மற்றும் ஒமைக்ரான் இணைந்த மூன்றாம் அலை. நாளை தமிழகத்தில் 33 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் சைதாப்பேட்டை மாநகராட்சி பள்ளியில் தொடங்கி வைக்க உள்ளார். பள்ளிகளில் படிக்கக்கூடிய 26 லட்சம் மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
ஒமைக்ரான் பாதிப்பு உள்ளவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஒமைக்ரான் பாதிப்பு மற்றும் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு முதல் ஐந்து நாட்களில் இரண்டு முறை பரிசோதனை மேற்கொண்டு தொற்று இல்லை என்று வந்தால் வீட்டு தனிமைக்கு அனுப்பப்படுவார்கள்.
கொரோனா விதிமுறைகளை கடைபிடிப்பதுதான் இந்த பேரிடரில் இருந்து மீள்வதற்கு ஒரே வழி. தொற்று அறிகுறிகள் இல்லாமல், 2 தடுப்பூசி போட்டவர்களுக்கு யாருக்காவது தொற்று ஏற்பட்டால் அரசு சார்பில் Pulse Oxymeter கொடுத்து Virtual Monitor மூலம் வீட்டில் கண்காணிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொற்று வேகம் அதிகரிக்கும் தருணத்தில் இதை செயல்படுத்த உள்ளோம்.” இவ்வாறு கூறினார்.