Corona Virus

மீண்டும் கொரோனா மையமாகும் டிரேட் சென்டர்; வைரஸ் பரவலை தடுக்க இதுதான் வழி - அமைச்சர் மா.சு. பரபரப்பு தகவல்

தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்றால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்பில்லை என்பதால் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

மீண்டும் கொரோனா மையமாகும் டிரேட் சென்டர்; வைரஸ் பரவலை தடுக்க இதுதான் வழி - அமைச்சர் மா.சு. பரபரப்பு தகவல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அசோக் நகரில் ஒரே தெருவை சேர்ந்த 10 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அப்பகுதியில் மருத்துவத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி, சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், மஹாராஷ்டிரா, கேரளா போன்ற மாநிலங்களில் தொற்று ஓரிரு நாளிலேயே அதிகரித்து வருகிறது. சென்னையிலும் தொற்று பாதிப்பு கூடி கொண்டே இருக்கிறது என்றார்.

சென்னையில் இந்த ஒரே தெருவில் 10க்கும் மேற்பட்டவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறிய அமைச்சர், இந்த தெருவை சேர்ந்த ஒருவர், ராயப்பேட்டை மருத்துவமனையில் ஒருவரை சந்தித்து வந்துள்ளார். அவருக்கு பின் அடுத்தடுத்த தொற்று ஏற்பட்டுள்ளதால், இது கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டு உள்ளது.

மேலும் சென்னையில் நேற்று 194 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இன்று 200க்கும் அதிகமாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், வரும் ஞாயிற்றுக்கிழமை 17வது மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் காரணமாக, சென்னையில் 3 இடங்களில் corona care center அமைக்கப்பட்டுள்ளது என்றும், தண்டையார்பேட்டை, மஞ்சம்பாக்கம், ஈஞ்சம்பாக்கம் ஆகிய இடங்களில் 500 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தை மீண்டும் கொரோனா பாதுகாப்பு மையமாக மாற்றப்படும் என்று கூறினார்.

இந்த சூழ்நிலையில், சென்னை மக்களுக்கு ஒரு வேண்டுக்கோள் கட்டாயம் முகக்கவசம், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசிய அமைச்சர், தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவதை பொறுத்தவரை முதல் தவணை 86%, இரண்டாம் தவணை 58% பேரும் செலுத்தி உள்ளதாகவும், 95 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதி உள்ளவர்களாக உள்ளனர். எனவே அவர்கள் இந்த தடுப்பூசி முகாமை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட 45 பேரில் 16 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும், 129 பேருக்கு எஸ்.ஜீன் டிராப் வந்துள்ளது. இவர்கள் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது என்றார். ஒமைக்ரான் தொற்று ஏற்பட்ட அனைவரும் அறிகுறிகள் இல்லாத நோய் தன்மையுடன் உள்ளனர். உலகம் முழுவதும் வெளிவரும் மருத்துவ அறிக்கைகளும் பெரும்பாலும் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டவர்கள் அறிகுறிகள் அற்ற பாதிப்புடன் உள்ளனர். அதனால் தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்றால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்பில்லை என்பதால் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.

மாவட்ட வாரியாக பள்ளிகளில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களை கணக்கெடுக்கும் பணியை சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும், மாணவர்களுக்கு பள்ளிகளுக்குச் சென்று தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். வரும் 3ஆம் தேதி 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணியை போரூரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார் என்றார்.

நடிகர் வடிவேலு , இயக்குநர் சுராஜ் உப்பட வெளிநாடுகளிலிருந்து வந்த பலருக்கு S வகை மரபணு மாற்றம் கண்டறியப்பட்டாலும் பெரிய அளவில் அறிகுறிகள் இல்லாத சூழல் நீடிக்கிறது எனக் கூறினார்.

banner

Related Stories

Related Stories