கொரோனாவின் ஒமைக்ரான் வகை தொற்று இந்தியாவிலும் பரவத் தொடங்கியதை அடுத்து இரண்டு தவணை தடுப்பூசிகளை அடுத்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தவும் ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது.
முதற்கட்டமாக மருத்துவப் பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள், இணை நோய் உள்ள 60 வயதுக்கும் மேலான முதியவர்களுக்கு எதிர்வரும் ஜனவரி 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
இப்படி இருக்கையில், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான இடைவெளி தொடர்பான முக்கிய முடிவை தேசிய நோய்த்தடுப்பு தொழில்நுட்ப குழு முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இரண்டாவது தவணை மற்றும் பூஸ்டர் தவணை இடையே அதிகபட்சமாக 9-12 மாத இடைவெளியை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் கடந்த ஜனவரி 16, 2021 முதல் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதாரப் பணியாளர்களுக்குத் பூஸ்டர் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்படும் என முடிவுகள் எட்டப்பட்டிருக்கிறதாம்.
மேலும், சுகாதாரப் பணியாளர்களுக்கு அடுத்தபடியாக, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொண்ட முன்களப் பணியாளர்களுக்கு அடுத்த கட்ட முன்னுரிமை வழங்கப்படும் எனவும், கடந்த ஏப்ரல் அல்லது மே மாதங்களில் இரண்டாவது டோஸ் பெற்ற மூத்த குடிமக்களுக்கும் இந்த இடைவெளித் தகுதியுடன் பிப்ரவரியில் முதல் பூஸ்டர் டோஸ் போடப்படும் கூறப்பட்டுள்ளது.