இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 மாநிலங்களில் 422 ஆக அதிகரித்துள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை மூலம் அறிவித்துள்ளது.
அதன்படி அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 108 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் 42 பேர் குணமடைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கடுத்தபடியாக டெல்லியில் 79, குஜராத்தில் 43, தெலங்கானாவில் 41, கேரளாவில் 39, தமிழ்நாட்டில் 34, கர்நாடகாவில் 31, ராஜஸ்தானில் 22, மேற்கு வங்கத்தில் 6 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது,
மேலும், ஹரியானா, ஒடிஷா, ஆந்திராவில் தலா 4, ஜம்மு காஷ்மிரில் 3, உத்தர பிரதேசத்தில் 2, சண்டிகர், லடாக், உத்தரகாண்டில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதுவரை 130 பேர் ஒமைக்ரானில் இருந்து குணமடைந்திருக்கிறார்கள்.
இதனிடையே மொத்தமாக இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6987 ஆக பதிவாகியுள்ளது. 76 ஆயிரத்து 766 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதில் புதிதாக 7,091 பேர் குணமடைந்திருப்பதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று 1.5 நாளில் பரவுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.