ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு நாளடைவில் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தொற்று பரவலை தீவிரமாக கண்காணிக்கும் வகையில் அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் பெருநகர சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அதன்படி, தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் 14 நாட்கள் மருத்துவமனையில்தான் சிகிச்சை அளிக்க வேண்டும். 14 நாட்களுக்கு முன்னரே தொற்று பாதித்தவரை வீட்டு தனிமைக்கு அனுப்ப வேண்டுமென்றால் சென்னை மாநகராட்சிக்கு கட்டாயம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
gccpvthospitalreports@chennaicorporation.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொற்று பாதிக்கப்பட்டவர் பெயர், முகவரி, தொலைபேசி எண், மருத்துவமனை பெயர், டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நாள், கிழமை உள்ளிட்ட முழு தகவலை அனுப்பி வைக்க வேண்டும்.
ஒருவர் மருத்துவமனை தனிமைப்படுத்தலில் இருப்பதா, கோவிட் சிகிச்சை மையத்தில் இருப்பதா, வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பதா என்பதை மருத்துவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
அந்த முடிவு மத்திய /மாநில அரசுகளின் சுகாதாரத்துறை வழிகாட்டுதலின் கீழும் தொற்று பாதிக்கப்பட்டவரின் வீட்டில் உள்ள வசதிகள் பொறுத்து முடிவு செய்யப்படும்.
வீட்டு தனிமையில் இருக்க கழிப்பறை வசதியுடன் கூடிய நல்ல காற்றோட்டம் கொண்ட தனி அறை இருக்க வேண்டும். இவை இல்லாமல் தவறும் பட்சத்தில் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் தொற்று பாதிப்பை உண்டாக்கும்.
தனியார் மருத்துவமனையில் உள்ள கன்சல்டேஷன் மருத்துவர்கள் மூலம் வீட்டு தனிமை சான்றிதழ் பெற்றுக்கொண்டு மருத்துவமனை தனிமைப்படுத்தலை சிலர் தவிர்க்கிறார்கள் என புகார்கள் எழுந்த நிலையில் சென்னை மாநகராட்சி தீவிர கண்காணிப்பை தொடங்கியுள்ளது.
அப்படி சான்றிதழ் பெறுவதால் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் அருகில் இருப்பவர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயத்தை தவிர்க்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை.