தடுப்பூசி செலுத்தி கொள்வதில் மதுரை மாவட்டம் மோசமான நிலையில் உள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் நேற்று தெரிவித்த நிலையில் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு ஒன்றினை அறிவித்துள்ளார்.
அதில், “மதுரை மாவட்டத்தில் முதல் தவணை 71 சதவீதம் பேரும் 2ம் தவணை 32 சதவீதம் பேர் மட்டுமே செலுத்திக் கொண்டுள்ளனர்.
தென் ஆப்ரிக்காவில் இருந்து பரவிய ஒமைக்ரான் வைரஸால் கர்நாடகாவுக்கு வந்த இருவர் பாதிக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் மதுரை உட்பட 12 அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒமைக்கரன் வைரஸ் கண்டறியும் கெமிக்கல் கிட் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
மதுரையில் விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை செய்வதற்கு ஏதுவாக மதுரை அரசு மருத்துவமனையில் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியும் பரிசோதனை வசதி செய்யப்பட்டுள்ளது.
வழக்கமாக ஆர்டிசிபிஆர் கருவியில் சளி சோதனை செய்யப்படுவதை போன்று ஒமைக்ரான் வைரஸ் பரிசோதனையும் செய்யப்பட இருக்கிறது. இதற்கு பயன்படுத்தும் இரசாயன மட்டும் மாறுபடுகிறது. இந்த கருவியில் ஒரே நேரத்தில் 96 சளி மாதிரிகளை 3 மணிநேரத்தில் வைரஸ் உள்ளதா என கண்டு அறியலாம்.
கெமிக்கல் கிட் இன்னும் சில தினங்களில் வர இருப்பதாகவும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 30 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு ஆக்ஸிஜன் மானிட்டர் உள்ளிட்ட அனைத்து வசதிகள் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதே போன்று குழந்தைகள் சிகிச்சை பெற 4 படுக்கை வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நபர்கள் நியாய விலை கடை, வியாபார நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட், திரையரங்கம், திருமண மண்டபம், கடைவீதிகள், துணிக்கடைகள், வங்கிகள் உள்ளிட்ட 18 இடங்களில் செல்லத் தடை விதிக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் ரத்தினவேல் கூறுகையில் கொரோனா வைரஸ் சிகிச்சை அனுபவம் உள்ளது. அதனால் ஒமைக்ரான் வைரஸுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து நிலையிலும் தயார் நிலையில் இருப்பதாக கூறினார்.