Corona Virus

”கொரோனா ஃபேக்டரியாக தி.நகர் மாறிவிடக் கூடாது; வியாபாரிகள் மன்னிக்கவும்” - அமைச்சர் மா.சு வேண்டுகோள்!

தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் இன்று முதல் கொரோனா பரிசோதனை மையமும், தடுப்பூசி மையமும் செயல்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

”கொரோனா ஃபேக்டரியாக தி.நகர் மாறிவிடக் கூடாது; வியாபாரிகள் மன்னிக்கவும்” - அமைச்சர் மா.சு வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் தீப ஒளி பண்டிகைக்கு புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜே கருணாநிதி, தா வேலு மற்றும் ஆர் கே மோகன் உடன் இருந்தனர்.

அமைச்சர் மா சுப்பிரமணியன், புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதனைத் தொடர்ந்து ரங்கநாதன் தெரு மற்றும் உஸ்மான் தெரு வீதியில் உள்ள அனைத்து கடைகளுக்கும் நேரடியாகச் சென்று கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரத்தை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்:-

மக்கள் நல்வாழ்வுத்துறை , சென்னை மாநகராட்சி, காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. சென்னை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் 3ம் தேதி நள்ளிரவு 12மணி வரை பொது மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும் என்றார்.

புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் முறையாக முகக்கவசம் அணியாமல் ஸ்டைலாக வருகின்றனர் என்றார். துர்கா பூஜை முடிந்த பின்னர் அசாம், மேற்கு வங்கத்தில் கொரோனா அதிகரித்தது. ஓனம் பண்டிகைக்கு பிறகு கேரளாவில் கொரோனா அதிகரித்தது.

கொரோனா ஃபேக்டரியாக தி.நகர் மாறிவிடக்கூடாது. ஓணத்தைப் போல், துர்கா பூஜையைப் போல் ஆகி விடக்கூடாது. பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

ரங்கநாதன் தெருவில் உள்ள சிறிய சிறிய தின்பண்டக்கடைகள் கொரோனா பரவ காரணமாக அமைகிறது. எனவே இன்று முதல் தீபாவளி முடியும் வரை அந்த கடைகள் மூடப்படும். இதற்காக வியாபரிகள் எங்களை மன்னிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்கச் செல்லும் பொதுமக்கள் குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் என்றார். இறுதியாக ரங்கநாதன் தெருவில் இன்று முதல் கொரோனா பரிசோதனை மையமும், தடுப்பூசி மையமும் செயல்படும் என்றார்.

banner

Related Stories

Related Stories