உலகம் முழுவதும் 2019ம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இரண்டு ஆண்டுகளை எட்டும் நிலையில் இன்னும் அதன் பிடியில் இருந்து மீண்டு வர முடியாமல் அரசாங்கங்கள் திணறி வருகின்றன.
ஆனால், முதல் முதலில் பரவத் தொடங்கிய சீனாவில் மற்ற நாடுகளை போன்று பெரிதளவில் பாதிப்பு ஏற்படாமல் இருந்தது. ஆனால் உலகெங்கும் கொரோனா பரவலின் மூன்றாவது அலையில் சிக்கியிருக்கும் வேளையில் சீனாவும் விதிவிலக்கல்ல என்பதை உணர்த்தும் வகையில் பியூஜியான் மாகாணத்தில் டெல்டா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
சிங்கப்பூரில் இருந்து வந்த நபர் மூலம் கொரோனா டெல்டா வைரஸ் நூற்றுக்கணக்கானோருக்கு பரவி இருக்கிறது. மேலும் பள்ளிக்குச் செல்லும் அவரது மகன் மூலம் சக மாணாக்கர்கள் 36 பேரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என சீன ஊடகம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 10ம் தேதி வரையில் பியூஜியானில் மட்டும் 152 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனால், புட்டியான் நகரில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டு சோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும், டெல்டா வைரஸால் குழந்தைகளே அதிகளவில் பாதிக்கப்படக் கூடும் என்பதால் சியாமென் உள்ளிட்ட நகரில் போக்குவரத்து சேவையும் முடக்கப்பட்டிருக்கிறது.