சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனைக்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சார்பாக 16 லட்சம் மதிப்புள்ள முகக்கவசம், கையுறை, கிருமி நாசினி போன்ற மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழ்நாடு வணிகர் பேரவையின் தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சப்பிரணியன் கூறியதாவது,
தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாம் அலை குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என உறுதியாக வல்லுநர்கள் தெரிவிக்காத நிலையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் குழந்தைகளுக்கு சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டு உள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் அரசின் தேவைகளுக்கு தற்போது வரை ஒப்பந்த அடிப்படையில் 35 ஆயிரம் நபர்கள் பணியில் உள்ளனர், அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் பணி நியணம் செய்ய முடியாது. மேலும் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு பெற்றுள்ள மருத்துவர்களுக்கு பணி வழங்குவதா இல்லை கொரோனா நேரத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு பணி வழங்குவதா என்பது குறித்து அரசு உரிய முறையில் பரிசீலித்து பணி வழங்கப்படும்.
மேலும் தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கிய பின் தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. தற்போது வரை தனியார் மருத்துவமனைகளில் 16 லட்சத்து 36 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது.
இலவசமாக செலுத்தும் பணி துவங்கிய கடந்த 10 நாட்களில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இன்னும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 4 நாட்கள் அவகாசம் உள்ளதால் அதன் பிறகு பதிவு செய்யும் மாணவர்கள் எண்ணிக்கை குறித்து அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவித்தார்.