Corona Virus

”இனி கொரோனா போரை வெல்லும் வீரர்கள் மக்கள்தான்” அதற்கான ஆயுதங்கள் இவைதான்? பட்டியலிட்ட தினத்தந்தி நாளேடு!

மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கைகள் தொடர்ந்து வெளி வரும் வேளையில் தினத்தந்தி நாளேடு அது தொடர்பாக தலையங்கம் வெளியிட்டுள்ளது.

”இனி கொரோனா போரை வெல்லும் வீரர்கள் மக்கள்தான்” அதற்கான ஆயுதங்கள் இவைதான்? பட்டியலிட்ட தினத்தந்தி நாளேடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடங்கி 16 மாதம் கடந்த நிலையில் தற்போது மூன்றாவது அலையைப் பற்றியும், தடுப்பூசி பற்றியும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் பற்றியும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்து வரும் துரித நடவடிக்கைகள் குறித்தும் "தினத்தந்தி" நாளிதழ் தனது தலையங்கத்தில் 3.8.2021 தேதியிட்ட இதழில் 3வது அலையை தடுக்கும் கேடயம் முகக் கவசம்தான் என்ற தலைப்பில் குறிப்பிட்டுள்ளது. இதில் விதிமுறைகளை மீறும் பொதுமக்கள் மீது கரும்புக்கரம் அல்ல இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

‘தினத்தந்தி’ நாளேட்டின் தலையங்கம் வருமாறு:-

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தொடங்கி 16 மாதங்கள் ஆகின்றன. எப்போது கொரோனா நம்மைவிட்டு ஓடும், இயல்பு வாழ்க்கை திரும்பும் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், இப்போது 3-வது அலை வந்து விடுமோ? என்ற அச்சம் அரசுக்கும், மக்களுக்கும் வந்துவிட்டது. முதல் கட்ட ஊரடங்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ந்தேதி பிறப்பிக்கப்பட்டது. அதன் பிறகு, நன்றாக பரவல் குறைந்த நேரத்தில், இந்த ஆண்டு டெல்டா பிளஸ் என்ற உருமாறிய கொரோனா 2-வது அலையாக உருவெடுத்து பரவி வருகிறது.

இதைப்பற்றி ஆய்வு செய்த அமெரிக்க நாட்டிலுள்ள நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள், இந்த உருமாறிய கொரோனா அம்மை நோயை விட வேகமாக பரவும் ஆற்றல் கொண்டது என்று கண்டறிந்துள்ளது. மற்றொரு அதிர்ச்சியான தகவல், தடுப்பூசி போட்டவர்களையும் இது பாதிக்கும் என்பது, டெல்லியிலுள்ள ஒரு பெண் டாக்டருக்கு 3 முறை கொரோனா வந்ததன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் அவருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தடுப்பூசி போடாத நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின்னர், முதல் தடுப்பூசியை இந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதியும், 2-வது தடுப்பூசியை மார்ச் 15-ந் தேதியும் போட்டிருக்கிறார்.

”இனி கொரோனா போரை வெல்லும் வீரர்கள் மக்கள்தான்” அதற்கான ஆயுதங்கள் இவைதான்? பட்டியலிட்ட தினத்தந்தி நாளேடு!

ஆனால், ஏப்ரல் 10-ந்தேதி 2-வது முறையும், அதே மாதம் 25-ந் தேதி 3-வது முறையும் அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா வந்தால் உயிரிழப்பு ஏற்படாது, வந்த சுவடும் தெரியாமல் போய்விடும். தமிழ்நாட்டில் கடந்த 5 நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால்தான் இதுவரையில் ஊரடங்கை நீட்டிக்கும் போதெல்லாம் தளர்வுகளை அறிவித்துக் கொண்டிருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த மாதம் 31-ந்தேதி முதல், வருகிற 9-ந் தேதிவரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் எந்த தளர்வுகளையும் அறிவிக்கவில்லை.

"ஊரடங்கை ஓரளவு தளர்த்தினால் உடனடியாக அனைவரும் கூட்டமாக சேர்ந்து விடுகிறோம்" என்று டாக்டர் ரேலா மருத்துவமனை விழாவில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஊரடங்கை நீட்டிக்கும் அறிவிப்பிலும் அதையே குறிப்பிட்டுள்ளார். "ஏதாவது குறிப்பிட்ட பகுதிகளில், அதிக அளவில் கூட்டம் சேர்வது தொடர்ந்து காணப்பட்டால், அந்தப் பகுதி மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி ஆணையர்கள், காவல் துறையினர், அந்த பகுதிகளை மூடும் நடவடிக்கைகளை பொதுநலன் கருதி முடிவு செய்யலாம்" என்று கூறியுள்ளார். முதல்-அமைச்சரின் அறிவிப்பு வெளிவந்த ஒருசில மணி நேரங்களில், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, தியாகராய நகர் ரெங்கநாதன் தெரு, புரசைவாக்கம் டவுட்டன் பகுதி உள்பட 9 பகுதிகளை வருகிற 9-ந்தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளார்.

பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், நேற்று ஆடி கிருத்திகை, இன்று ஆடிப்பெருக்கையொட்டி கோவில்களில் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. "3-வது அலை என்று தமிழ்நாட்டில் ஒன்று ஏற்படவே முடியாதபடி தமிழக மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். வருமுன் காத்தலே விவேகம். இதில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்" என்று கூறிய முதல்-அமைச்சர், மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது, சமூக இடை வெளியை கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு, கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை வலியுறுத்தி கூறியிருக்கிறார். இதை எந்த விழாவில், எந்தக் கூட்டத்தில் பேசும் போதும் வலியுறுத்தி வருகிறார்.

இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு முழுவதும் ஒரு வார கால தொடர் பிரசாரத்தையும் தொடங்கி வைத்திருக்கிறார். ஆக, இப்போது 3-வது அலை வராமல் தடுப்பது மக்கள் கையில்தான் இருக்கிறது. கொரோனா போரை வெல்லும் வீரர்கள் மக்கள்தான். அவர்கள் கையில் உள்ள ஆயுதங்கள் தடுப்பூசி, முக கவசம், சமூக இடைவெளிதான். இந்தப்போரில் எல்லோருமே தங்களை தற்காத்துக் கொள்ளும் முதல் ஆயுதம் முகக்கவசம்தான். இந்த நடைமுறைகளை பின்பற்றாத பொதுமக்கள் மீது அதிகாரிகளும் இனி, கரும்புக் கரம் கொண்டல்ல, சற்று இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ‘தினத்தந்தி’ தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories