Corona Virus

”மூன்றாம் அலை பரவுவதை தடுக்க அரசுக்கு கை கொடுங்கள்” - மக்களுக்கு தினகரன் நாளேடு வேண்டுகோள்!

மக்கள் தங்கள் பங்களிப்பை முறையாக வழங்கி மூன்றாவது அலை பரவாமல் தடுத்திட அரசுக்கு கைகொடுப்போம் என்று ‘தினகரன்’ தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

”மூன்றாம் அலை பரவுவதை தடுக்க அரசுக்கு கை கொடுங்கள்” - மக்களுக்கு தினகரன் நாளேடு வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா நோய் தொற்றின் 2ம் அலை பரவலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு திறம்பட செயல்பட்டு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. மக்களின் வாழ்வாதாரம் இழப்பை கவனத்தில் கொண்டு, பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். கொரோனா ஊரடங்கு தளர்வுகளை பொருத்தவரை அரசு தன் கடமையை செய்தாலும், மக்கள் தங்கள் பங்களிப்பை ஒழுங்காக செய்தால்தான் அதன் பலன் முழுமையாக கிடைக்கும். ஆனால், மக்களாகிய நாம் நம் பங்களிப்பை முறையாக செய்கிறோமா என்றால், இல்லை என்பது தான் பதில்.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் பொது இடங்களில், குறிப்பாக அங்காடி பகுதிகளில் அலைமோதும் கூட்டத்தை பார்த்தால் கொரோனா பற்றிய அச்சம் மக்களிடையே கொஞ்சம் கூட இல்லை என்பது கண்கூடாக தெரிகிறது. ஊரடங்கின் போது கொரோனா பீதியால் வீட்டிற்குள் முடங்கிக் கிடந்தவர்கள் எல்லாம், இப்போது வெளியே கிளம்பி விட்டார்கள். தனி மனித இடைவெளி, முகக்கவசம் போன்ற கொரோனா ஒழிப்பு ஆயுதங்கள் எல்லாவற்றையும் தூக்கி வீசிவிட்டு அலை அலையாக அவர்கள் உலா வருவதுதான் பிரச்னையே.

வீட்டை விட்டு வெளியே வாருங்கள், வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால், அது அத்தியாவசிய தேவைக்கானதாக இருக்கட்டும். கூட்டமாக செல்லாதீர்கள். தேவையான பொருட்களை வாங்க குடும்பத்தில் ஒருவரோ, இருவரோ செல்லுங்கள். தொலை தூரம் செல்லாமல் அருகில் உள்ள கடைகளிலேயே பொருட்களை வாங்கிக்கொள்ளலாமே என்று சொன்னால் கேட்பதற்கு ஆளில்லை. விளைவு, தமிழகத்தில் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கிவிட்டது. தமிழகத்தில் மூன்றாவது அலை வராமல் தடுப்பதில் முனைப்புடன் அரசு செயல்பட்டு வரும் வேளையில், இரண்டாம் அலையே இன்னும் முழுமையாக ஓயாதது கிலியை ஏற்படுத்துகிறது. இதனால், ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீடித்துள்ள தமிழக அரசு, கட்டுப்பாடுகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சி பகுதியில் 9 அங்காடி பகுதிகளில் உள்ள கடைகளை வரும் 9ம் தேதி வரை திறக்க தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கிற்கு பிறகு, கடைகள் திறக்கப்பட்டு கொஞ்சம், கொஞ்சமாக வியாபாரம் அதிகரித்து வரும் சூழலில் திடீரென கடைகள் மூடப்பட்டிருப்பது வியாபாரிகளை பாதித்துள்ளது. பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று. ஆனால், இன்றைக்கு அது தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது சோகமான நிகழ்வு. கொரோனா மூன்றாவது அலையை தடுக்க வேண்டியது அவசியம். அதை உணர்ந்து இனியாவது அனைவரும் ஜாக்கிரதையாக இருப்போம். கொரோனா தடுப்பு விதிகளை கண்டிப்புடன் கடைப்பிடித்து, மூன்றாவது அலை பரவலை தடுக்க முனைப்புடன் செயல்படும் தமிழக அரசுக்கு கைகொடுப்போம்.

banner

Related Stories

Related Stories