கொரோனா நோய்த் தொற்று மீண்டும் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் இன்றி மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா நோய் பரவல் விழிப்புணர்வு வார விழா நடத்துவதற்கு தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டார்.
அதன் தொடர்ச்சியாக இன்று தேனி பழைய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு முகாமை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் முன்னிலையில் ஆட்சியர் முரளிதரன் துவக்கி வைத்தார். பின். கொரனோ தடுப்பு புகைப்படங்கள் மற்றும் தமிழக அரசின் காணேலி வாகனங்களை பார்வையிட்டனர். இந்த முகாம் முதல் ஒரு வாரத்திற்கு கட்டாய முக கவசம், கிருமி நாசினி மருந்து பயன்படுத்துதல், சமூக இடைவெளி உள்ளிட்ட பல்வேறு வகையான விழிப்புணர்வுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளன.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் முரளிதரன் கூறுகையில், கேரளாவில் இருந்து தேனி மாவட்டம் வழியாக தமிழகம் வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் நெகடிவ் சான்று கட்டாயம் எனவும், இதற்காக குமுளி, கம்பம்மெட்டு மற்றும் போடி மெட்டு ஆகிய 3பகுதிகளில் மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் ஆடி கிருத்திகை, ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவசை ஆகிய விழாக்களில் பொதுமக்கள் அதிகம் கூட வாய்ப்பிருப்பதால் நாளை ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரையில் ஒரு வாரத்திற்கு மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்படுவதாகக் கூறினார். அதே நேரத்தில் கோவில்களில் வழக்கம் போல சுவாமிக்கு நடைபெறும் பூஜைகள் தொடரும் என்றார்.