கொரோனா பரவலின் இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக தமிழ் நாட்டில் குறைந்து வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் சீரிய தடுப்பு நடவடிக்கைகளே அதற்கு முழு முதற் காரணமாக அமைந்துள்ளது.
ஏப்ரல் மே மாதங்களில் உச்சத்தில் இருந்த இரண்டாவது அலையின் தாக்கம் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நாள் முதலே மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளின் காரணமாக தற்போது தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு நேற்றைய நிலவரப்படி 1756 பேருக்கு தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.
அதனையடுத்து மக்களின் பொருளாதார தேவையை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அளித்து கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீடித்து வருகிறது. இருப்பினும் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்காமல் இருக்கும் வகையில் பொதுமக்கள் தொடர்ந்து முக கவசங்களை அணிந்தும், தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா பரவலின் இரண்டாவது அலையே இன்னும் முற்றுப்பெறாத நிலையில் மூன்றாவது அலை உருவெடுக்கக் கூடும் எனவும் உலக சுகாதார அமைப்பும், மருத்துவ ஆராய்ச்சியாளர் தொடர்ந்து எச்சரித்தும் வருகின்றனர்.
ஆனால் மூன்றாம் அலை உருவெடுத்தாலும் சமாளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் தி.மு.க அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கையால் மருத்துவ கட்டமைப்புகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சென்னையில் குடியிருப்பு நல சங்கங்களின் பிரதிநிதிகளுடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆலோசனை கூட்டம் நடத்திய பிறகு கொரோனா பரவல் குறித்தும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், மக்கள் பல இடங்களில் முகக் கவசம் அணியாமல் இருக்கின்றனர். குறிப்பாக பல்வேறு பெரிய கடைகளில் முகக்கவசம் இல்லாமல் தங்களுக்கு கொரோனோ வராது என்று இருக்கின்றனர். மாநகராட்சி தினமும் லட்சக்கணக்கில் அபராதம் விதித்தாலும் அவர்கள் அதை பெரிய பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. எனவே மக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை அனைத்தையும் பின்பற்ற வேண்டும்.
மூன்றாவது அலை வந்தால் முக்கியமாக சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கே அதிகமாக தாக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றனர். எனவே அவர்கள் உரிய மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக கொரோன தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.