கொரோனா இரண்டாவது அலை காரணமாக தி.மு.க தலைமையிலான தமிழ்நாடு அரசு முன்னெடுத்த கடுமையான கட்டுப்பாடுகளுக்கு பலன் கிடைக்கும் வகையில் தொற்று பாதிப்புக்கு சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 1.36 லட்சமாக குறைந்துள்ளது.
புதிதாக 1,61,736 மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 12,772 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இரண்டாவது அலையின் தொடக்கத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டு வந்த சென்னை, கோவை, உள்ளிட்ட மாவட்டங்களில் கணிசமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
அதன்படி புதிதாக கோவையில் 1728, ஈரோட்டில் 1295, சென்னையில் 828, சேலத்தில் 796, திருப்பூரில் 781, தஞ்சையில் 596, செங்கல்பட்டில் 522 என அதிகபட்ச பாதிப்பு பதிவாகியுள்ளது.
மேலும் கடந்த 24 மணிநேரத்தில் பலியானோரின் எண்ணிக்கை 254 ஆக பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக செங்கல்பட்டில் 33, சென்னையில் 28, கோவையில் 27, காஞ்சியில் 13, சேலம், திருச்சியில் தலா 11 என உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதுகாறும் கொரோனாவால் தமிழ்நாட்டில் 29,801 பலியாகியிருக்கிறார்கள்.
இருப்பினும் புதிதாக 25,561 பேர் குணமடைந்திருப்பதால் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 1,36,884 உள்ளது.