கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழக அரசின் வழிக்காட்டுதலின் படி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
முதற்கட்டமாக முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், பின்னர் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள், அதன் தொடர்ச்சியாக முன்னுரிமை அடிப்படையில் 18 வயது மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த ஏப்ரல் 9ம் தேதி முதல் தற்போது வரை 21 லட்சத்து 46 ஆயிரத்து 680 நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில் 15 லட்சத்து 59 ஆயிரத்து 783 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 5 லட்சத்து 86 ஆயிரத்து 897 நபர்களுக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டிருப்பதாகவும், அதில் 45 வயது மேற்பட்டவர்களுக்கு 66.23% தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோயம்பேடு வணிக வளாகத்தில் 8239 வியாபாரிகளுக்கு, காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் 2143 வியாபாரிகளுக்கு, சிந்தாதரிப்பேட்டையில் 89 வியாபாரிகளுக்கு தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. வரும் நாட்களிலும் தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணி நடைப்பெறும் எனவும் மாநகராட்சி சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.