Corona Virus

கோவிட் அறிகுறி கணக்கெடுப்பு: களப்பணியாளருக்கு PPE கிட், உரிய பயிற்சி வழங்கப்படும் - ககன்தீப் சிங் பேடி

பொதுமக்கள் கோவிட் தொற்றுக்கான அறிகுறிகள் ஏதேனும் இருப்பின் தங்கள் இல்லங்களுக்கு நாள்தோறும் வரும் களப்பணியாளர்களிடம் எவ்வித அச்சமுமின்றி தெரிவிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.

கோவிட் அறிகுறி கணக்கெடுப்பு: களப்பணியாளருக்கு PPE கிட், உரிய பயிற்சி வழங்கப்படும் - ககன்தீப் சிங் பேடி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கோவிட் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்களை நாள்தோறும் அணுகி கோவிட் தொற்று அறிகுறிகளான சளி, காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளனவா என கணக்கெடுப்பு செய்யவும், அறிகுறி உள்ள நபர்களை காய்ச்சல் முகாம்களுக்கு அல்லது அருகாமையில் உள்ள மாநகராட்சி சுகாதாரநிலையங்களுக்கு செல்ல அறிவுறுத்துதல், 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களின் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரம் போன்ற பணிகளை மேற்கொள்ள 11,963 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த களப்பணியாளர்களின் கணக்கெடுப்பின்படி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுநாள் வரை 5,08,538 நபர்கள் தொற்று அறிகுறி உள்ள நபர்களாக கண்டறியப்பட்டு அவர்களில் 4,50,873 நபர்களுக்கு RTPCR தடவல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வீடுகள்தோறும் சென்று களப்பணி மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு மாநகராட்சியின் சார்பில் உரிய பயிற்சி அளிக்கப்பட்டு, கோவிட் தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற நாள்தோறும் ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும் களப்பணியாளர்கள் இந்த பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற ஏதுவாக அவர்களுக்கு மாநகராட்சியின் சார்பில் 15 நாட்களுக்கு ஒரு முறை மூன்றடுக்கு முகக் கவசங்கள் 15 எண்ணிக்கையிலும், 5 எண்ணிக்கையிலான மறு பயன்பாட்டுடன் கூடிய முகக் கவசங்கள் மற்றும் கைகளை அவ்வப்போது சுத்தம் செய்யகிருமி நாசினி போன்ற பாதுகாப்பு பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

கோவிட் தொற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து மருத்துவர்களின் ஆலோசனையின்படி முறையான சிகிச்சைகளை பின்பற்றினால் விரைவில் குணம் அடையலாம். எனவே பொதுமக்கள் கோவிட் தொற்றுக்கான அறிகுறிகள் ஏதேனும் இருப்பின் தங்கள் இல்லங்களுக்கு நாள்தோறும் வரும் களப்பணியாளர்களிடம் எவ்வித அச்சமுமின்றி தெரிவித்து தங்களின் உடல் வெப்பநிலை, சுவாசத்தில் ஆக்சிஜன் அளவு போன்ற அடிப்படை பரிசோதனைகளை தங்கள் இல்லங்களிலேயே மேற்கொண்டு பயனடைய வேண்டும் என முதன்மை செயலாளர் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories