இந்தியாவில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்த வந்த நேரத்தில், கடந்த மாதத்தில் இருந்து திடீரென 2-வது அலை சூறாவளியாக சுழற்றி அடிக்க தொடங்கியது.
முதல் அலையில் சமாளித்த பொதுமக்களும், அரசுகளும் இந்த சூறாவளிக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். கடந்த இரண்டு வாரங்களாக தினந்தோறும் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டிய வண்ணம் உள்ளது.
2-வது அலையில் நோயாளிகளுக்கு அதிக அளவில் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இதனால் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இந்தியா திணறி வருகிறது. உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. மே 15-ந் தேதிக்குப் பிறகு கொரோனா சூறாவளி சற்று சாந்தமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நேரத்தில் 3-வது அலை தவிர்க்க முடியாதது என்று அரசுக்கான விஞ்ஞானம் சார்ந்த ஆலோசகர் விஜய் ராகவன் எச்சரித்துள்ளார். இதுபற்றி விஜய்ராகவன் குறிப்பிடுகையில் ‘‘3-ம் கட்ட அலை தவிர்க்க முடியாதது. இந்த வைரஸ் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது.
ஆனால், எந்தநேரத்தில் தாக்கி உச்சத்தை அடையும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், நாம் 3-வது அலையை எதிர்கொள்ள தயாராவோம் என்ற நம்பிக்கை உள்ளது. தடுப்பூசி மேம்படுத்தல் போன்ற தற்போதைய கண்காணிப்பு தேவை.
அனைத்து இடங்களிலும் முழுமையான விதிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமே கொரொனா தொற்றைக் குறைக்கவும், ஒழிக்கவும் முடியும்’’ எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் மூன்றாம் அலை குறித்த எச்சரிக்கையை தலைப்புச் செய்தியாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அனைவரும் கண்டிப்பாக ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
அவசர, உடனடி, தேவைகளை பூர்த்தி செய்யவது இன்றியமையாதது. கொரொனா வைரஸ் நம் வழியாகதான் பரவுகிறது. நம்மால்தான் அது பரவுவதைத் தடுத்து நிறுத்த முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.