கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை சீரம் நிறுவனம் உயர்த்திய நிலையில், கோவாக்சின் தடுப்பூசியின் விலையும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அதன் பரவலை தடுப்பதற்காக கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசியை புனேயை சேர்ந்த சீரம் நிறுவனமும், கோவாக்கின் தடுப்பூசியை ஐதராபாத்தை சேர்ந்த பார்த் பயோடெக் நிறுவனமும் தயாரிக்கின்றன. இந்த 2 நிறுவனங்களுமே மத்திய அரசுக்கு ஒரு டோஸ் தடுப்பூசியை ரூ.150க்கு வழங்கி வருகின்றன. இவற்றை மத்திய அரசு வாங்கி, மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
தற்போது, இந்த தடுப்பூசிகள்தான் நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் ரூ.250க்கு போடப்பட்டு வந்தது. இந்நிலையில், சீரம் நிறுவனம் தனது தடுப்பூசியின் விலையை சில தினங்களுக்கு முன் திடீரென உயர்த்தியது. அதில், மாநில அரசுகளுக்கு ரூ.400ம், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600ம் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த திடீர் விலை உயர்வுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்துள்ளது. இந்நிலையில், சீரம் நிறுவனத்தை பின்பற்றி பாரத் பயோடெக் நிறுவனமும் கோவாக்சின் விலையை உயர்த்தக்கூடும் என கருதப்பட்டது. அது நேற்றிரவு உண்மையானது. இந்த நிறுவனம் நேற்று முன்தினம் தனது தடுப்பூசியின் விலையை பலமடங்கு உயர்த்தியது.
மாநில அரசுகளுக்கு சப்ளை செய்யப்படும் கோவாக்சின் தடுப்பூசி ரூ.600க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1,200க்கும் விற்கப்படும் என்றும் அது அறிவித்தது. இந்த விலை உயர்வு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், செயற்கையான தடுப்பூசி தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதன் மூலம் லாபம் ஈட்ட முயற்சிகள் நடக்கின்றனவா என்றும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
முன்னதாக தண்ணீர் பாட்டிலின் விலையை விட கோவாக்சின் தடுப்பூசியின் விலை குறைவாக கிடைக்கும் எனக் கிடைக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.