Corona Virus

சென்னையில் கள்ளச் சந்தையில் கொள்ளை விலைக்கு விற்கப்படும் ‘ரெம்டெசிவர்’ : வேடிக்கை பார்க்கும் காவல்துறை!

சென்னையில் உள்ள பல மருந்துக் கடைகள் 100 மில்லி கிராம் வியால் மருந்துக்கு ரூ.14 ஆயிரம் வரை விலைபேசி விற்பனை செய்து வருகின்றன.

சென்னையில் கள்ளச் சந்தையில் கொள்ளை விலைக்கு விற்கப்படும் ‘ரெம்டெசிவர்’ : வேடிக்கை பார்க்கும் காவல்துறை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மனிதத் தன்மையற்ற மருந்து உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் கொரோனா மருந்தைப் பதுக்கி வைத்துக் கொள்ளையடிக்கத் தொடங்கிவிட்டனர். அரசு மருத்துவமனைகளில் கிடைக்காத கொரோனா மருந்தான "ரெம்டெசிவீர்" 100 மில்லி கிராம் வியால் ரூ.14,000 வரை கருப்புச் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றை வாங்கி தனியார் மருத்துவமனைகள் கொள்ளை லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றன.

தமிழகக் காவல்துறையோ கை கட்டி மவுனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது குறித்து "தி டைம்ஸ் ஆஃப்இந்தியா" ஆங்கில நாளேட்டின் நேற்றைய (24.04.2021), இதழில் வெளியாகியுள்ள சிறப்புச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:-

விதிமுறைகள், அரசின் உறுதிமொழிகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டு, கோவிட்-19 எனப்படும் கொரோனா நோய்க்கு முக்கிய மருந்தான "ரெம்டெசிவீர்" கருப்புச் சந்தையில் கொடிகட்டிப் பறக்கிறது. சென்னையில் உள்ள பல மருந்துக் கடைகள் 100 மில்லி கிராம் வியால் மருந்துக்கு ரூ.14 ஆயிரம் வரை விலைபேசி விற்பனை செய்து வருகின்றன.

இதனை தனியார் மருத்துவமனைகள் வாங்கி கொள்ளை லாபம் அடித்து வருகின்றன. இந்த மருந்தைக் கொள்முதல் செய்வதற்கு உதவி செய்வதாக மாநில அரசு உறுதி அளித்துள்ள போதிலும் பல தனியார் மருத்துவமனைகள் தங்களால் முடியாது என்று கையைக் கழுவி விட்டதால் ஏராளமான கொரோனா நோயாளிகள் தவிக்க விடப்பட்டுள்ளனர். நாங்கள் 6 வியால்கள் "ரெம்டெசிவீர்" மருந்தை தலா ரூ.14,000 விலைக்கு வாங்கி வந்தோம் என்று மயிலாப்பூரைச் சேர்ந்த ஒரு கொரோனா நோயாளிகள் உதவியாளரான புருஷோத்தமன் என்பவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கள்ளச் சந்தையில் கொள்ளை விலைக்கு விற்கப்படும் ‘ரெம்டெசிவர்’ : வேடிக்கை பார்க்கும் காவல்துறை!

கருப்புச் சந்தையில் மருந்து!

கருப்புச் சந்தையில் இந்த மருந்து ஆர்டர் கொடுத்த 2 நாட்களுக்குள் வழங்கப்பட்டு விடுகிறது. "ரெம்டெசிவிர்" மருந்தின் சந்தை விலை ஒரு வியால் ரூ.900 முதல் ரூ.4,800 வரை உள்ளது. ஆனால் அதன் சந்தை விலைப் போல் மூன்று அல்லது 4 மடங்கு விலை கொடுத்து அதை கருப்புச் சந்தையில் வாங்க வேண்டியுள்ளது. ஆங்கில நாளேட்டின் சார்பாக வாடிக்கையாளர்களைப் போல் ஆறு வெவ்வேறு மருந்து நிறுவனங்களை அணுகிய போது, 4 நிறுவனங்கள் தங்களிடம் இருப்பு இல்லை என்று கூறிவிட்டன.

ஆனால் 2 நிறுவனங்கள் ஒரு வியால் ரூ.6,500 விலைக்கு வழங்குவதற்கு ஒப்புக்கொண்டனர். பட்டியலிலிருந்த நிறுவனங்களில் மூன்று நிறுவனங்கள் விலை பற்றிய விபரங்களைப் பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டன. பாதிக்கப்பட்டவர் தமது ஒரிஜினல் மருந்துச் சீட்டையும் மருத்துவமனையில் கோவிட்-19 பாசிட்டிவ் அறிக்கையையும் ஆதார் அட்டை பற்றிய விவரங்களையும் தாக்கல் செய்த பின் சனிக்கிழமை அன்று தங்களிடம் கொள்முதல் செய்யலாம் என்று கூறியுள்ளன.

நோயாளிகளின் உதவியாளர்களுக்கு மருந்து நிறுவனங்களே விற்பனை!

ரெம்டெசிவீர் மருந்து மருத்துவமனைகளுக்கு மட்டுமே அதிகாரப்பூர்வ விற்பனையாளர்களால் விற்கப்படவேண்டும். ஆனால் சென்னை மருந்து நிறுவனங்கள் அதனை நோயாளிகளின் உதவியாளர்களுக்கு விற்பனை செய்யத் தொடங்கிவிட்டன. சென்னையில் உள்ள மருந்து நிறுவனங்கள் ஏப்ரல் முதல் வாரத்திலிருந்தே விற்பனை செய்து வருகின்றன. இது அதிகாரப்பூர்வமற்ற குறிப்பாக வட இந்திய மருந்து நிறுவனங்கள் இந்த கருப்புச் சந்தை விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன.

மருந்து உற்பத்தி செய்யும் வட இந்திய நிறுவனங்கள் அவற்றை அதிகாரப்பூர்வமற்ற விற்பனையாளர்களுக்கு வழங்கி வருவதால் அவை கருப்புச் சந்தையில் அந்த மருந்தை விற்பனை செய்ய வழிவகுத்து விட்டது. சுட்டுரையில் (டுவிட்டர்) கருத்து தெரிவிக்கும் ஒருவர் இந்த மருந்து கருப்புச் சந்தையில் விற்பனை செய்யப்படும் இடங்களின் பட்டியலையும் கருப்புச் சந்தை விற்பனையாளர்களின் பட்டியலையும் வெளியிட முயற்சித்துள்ளார்.

வேடிக்கை பார்க்கும் தமிழக காவல்துறை!

தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டு நிர்வாகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் இதுவரை இம்மருந்து கருப்புச் சந்தையில் விற்கப்படுவதாக பொது மக்களிடமிருந்து புகார் எதுவும் வரவில்லை என்றும் உரிமத்தை உறுதி செய்த பின்பே மருந்து விற்பனை செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார். அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இது தொடர்பாக இந்த வாரம் 12க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கும்போது, தமிழ்நாட்டுக் காவல் துறையில் ஒரே ஒரு வழக்குக் கூட இதுவரை பதிவு செய்யப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் தமிழ்நாடு மருத்துவச் சேவைகள் கழகம் நோயாளிகளின் அடிப்படையில் இந்த மருந்தை வழங்குவதற்கு உறுதியளித்திக்கிற சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசும் அந்த உறுதியை அளித்திருந்தது. ஆனால் தாங்கள் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தும் இன்னமும் தங்களுக்கு மருத்து வழங்கப்படவில்லை என்று தனியார் மருத்துவமனைகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அந்த விற்பனை முழுவதையும் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் ஏற்றுக் கொண்டு கொள்முதல் செய்து நோயாளிகள் அடிப்படையில் எங்களுக்கு வழங்கவேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்து ஒரு வாரம் ஆகியும் இதுவரை பதில் எதுவும் வரவில்லை என்று இந்திய மருத்துவ சங்க மாநிலச் செயலாளர் ஏ.கே.ராம்குமார் கூறியுள்ளார்.

சென்னை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவமனையைச் சேர்ந்த பி.ராமகிருஷ்ணன் கூறுகையில், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் இந்த மருந்தைக் கொள்முதல் செய்து அதன் மாவட்ட அலுவலகங்கள் மூலமோ, அரசு மருத்துவமனைகள் மூலமோ, தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கலாம் என்று கூறியுள்ளார். கொரோனா நோய்க்கு இந்த மருந்து கட்டாயமில்லை என்றும் இந்த மருந்தைப் பயன்படுத்தலாமா என்பதை டாக்டர்களே முடிவு செய்யலாம்.

ஆனால் நோயாளிகள் இறந்தால் உறவினர்கள் பிரச்சினை செய்வார்கள் என்பதற்காகவே டாக்டர்கள் இந்த மருந்தை பரிந்துரை செய்வதற்கு, நிர்ப்பந்தம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனை இடைத்தரகர்கள் பயன்படுத்திக் கொண்டு கருப்புச் சந்தையில் விற்பனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த மருந்தை அதிக அளவில் இறக்குமதி செய்வதன் மூலம் இந்த கருப்புச் சந்தையை முற்றிலும் அகற்ற முடியும் என்று கூறப்படுகிறது.

இவ்வாறு "தி டைம்ஸ் ஆஃப்இந்தியா" ஆங்கில நாளேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories