Corona Virus

கொரோனா 2வது பேரலை நேரும் என எச்சரித்த முன்னாள் IAS: கண்டுகொள்ளாத அரசுகள் - விரிவான கட்டுரை! 

சீனாவும் மற்ற கிழக்கு ஆசிய நாடுகளும் சாதித்ததை இந்தியாவால் ஏன் சாதிக்க முடியவில்லை? சீனாவைப் போல இந்தியா ஒரு சர்வாதிகார நாடு அல்ல என்ற ஒரு கருத்தும் உண்டு.

கொரோனா 2வது பேரலை நேரும் என எச்சரித்த முன்னாள் IAS: கண்டுகொள்ளாத அரசுகள் - விரிவான கட்டுரை! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இரு தினங்களுக்கு முன்னர், "சன்செய்திகள்" தொலைக்காட்சியில், அதன் தலைமைச் செய்தி ஆசிரியர் எம்.குணசேகரன் நெறியாளராக இருந்து நடத்திய "கேள்விக் களம்" விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும், தமிழக அரசின் முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளருமான எஸ்.பூர்ணலிங்கம் ஐ.ஏ.எஸ். (ஓய்வு), "கொரோனாவின் இரண்டாவது பேரலை நேரும்" என தாம் 2020 ஆம் ஆண்டிலேயே எச்சரித்து இருந்ததையும், அதனைக் குறிப்பிட்டு ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் எழுதி இருந்ததையும், அதனை அரசாங்கம் உள்ளிட்ட யாரும் கண்டு கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டார்.

"கொரோனா" பேரழிவு அதிகரித்துள்ள இவ்வேளையில், பூர்ணலிங்கம் ஐ.ஏ.எஸ்., கடந்த ஆண்டு ‘திஇந்து’ ஆங்கில நாளிதழில் எழுதியிருந்த அக்கட்டுரையை இவ்வேளையில் அப்படியே முரசொலி நாளேடு பிரசுரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா இறப்புக் குறித்து ஆர். பூர்ணலிங்கம் கட்டுரையில் கூறியிருப்பதாவது :-

கோவிட்-19 உலகம் முழுவதும் தொடர்ந்து சுழன்றடிக்கிறது. இரண்டாவது கொரோனா அலையால் பாதிக்கப்பட்டவர்களையும் அதனால் ஏற்படும் இறப்புகளையும் ஐரோப்பா சமாளிக்க முயற்சி செய்கிறது. இதனால் கவலையடைந்துள்ள ஐரோப்பியத் தலைவர்கள் நோய்ப் பரவுவதைத் தடுக்கவும் இறப்பு விகிதத்தைக் குறைக்கவும் பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்தியா முதல் கரோனா அலையில் சிக்கியிருக்கிறது. நோய் வாய்ப்பட்டவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, நோய்த் தொற்றை ஏதோ தன்னால் அறிந்த வகையில் சமாளிக்க அமெரிக்கா முயற்சி செய்தாலும், அந்நாட்டின் இடத்தை முறியடிக்கும் வகையிலும் உலகில் முதலிடத்தைப் பிடிக்கும் வகையிலும் இந்தியா மெல்ல நகர்கிறது.

கொரோனா 2வது பேரலை நேரும் என எச்சரித்த முன்னாள் IAS: கண்டுகொள்ளாத அரசுகள் - விரிவான கட்டுரை! 

சீனாவும் மற்ற கிழக்கு ஆசிய நாடுகளும் சாதித்ததை இந்தியாவால் ஏன் சாதிக்க முடியவில்லை? சீனாவைப் போல இந்தியா ஒரு சர்வாதிகார நாடு அல்ல என்ற ஒரு கருத்தும் உண்டு. ஆனால் இந்தியாவில் வெறும் 600 பேர்கள் மட்டுமே நோயால் பாதிக்கப்பட்ட போதே, கடுமையான ஊரடங்கு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தற்போது 75 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும், பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென்பதற்காக எல்லாவற்றையும் திறந்துவிடும் நிலைக்கு இந்தியா நெருக்கப்பட்டுள்ளது.

தேவை ஏற்படும் முன்பே ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாகும், அது அமல்படுத்தப்பட்ட விதத்தின் காரணமாக மும்பை, சென்னை போன்ற நகர்ப்புறங்களிலும் உத்தரப்பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களில் கிராமப்புறங்களிலும் நோய் பரவியதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நோய் பரவுவதை ஊரடங்கால் தடுக்க முடியவில்லை, ஆனால் அது உச்சக்கட்டத்தை அடைவதை தாமதப்படுத்தியது என்ற கருத்தும் உண்டு.

மாநிலங்களுக்கிடையேயும் மாவட்டங்களுக்கிடையேயும் மக்கள் சென்று வருவதை வரைமுறைப்படுத்தியதால், பல்வேறு மாவட்டங்களில் வைரஸ் பரவியதும் அது உச்சக்கட்டத்தை அடைந்ததும் வெவ்வேறு நேரத்தில் நிகழ்ந்தன. இதன் விளைவாக இந்தியாவில் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து, செப்டம்பர் மாதத்தில் உச்சத்தை எட்டியது.

பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறையும் என்ற நம்பிக்கை உள்ளது. ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகளைப் போல இந்தியா உச்சக்கட்டத்தை எட்டவில்லை. மாவட்டங்களுக்கிடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது இதற்கான காரணமாக இருக்கலாம். தடுப்பூசியோ, நோய்க்கான உறுதியான தீர்வோ உடனடியாக இல்லாமல் போனால், இரண்டாவது அலையை சமாளிக்க நாம் தயாராக வேண்டும்.

நல்லவேளையாக, இந்தியாவில் இறப்பு விகிதமானது, மேற்கத்திய நாடுகளைப் போல் அச்சுறுத்தும் வகையில் இல்லை. அக்டோபர் பத்தாம் தேதி வரை 1,08,000 பேர் இறந்துள்ளனர். உலக நாடுகளில் 10 இலட்சம் பேருக்கு 138 பேர் என்ற விகிதத்தில் இறப்பு விகிதம் இருக்கும் போது, இந்தியாவில் அந்த எண்ணிக்கை 78 ஆகவே உள்ளது. இந்தியாவில் இளம் வயதோரின் உடல் திறன் ஒரு காரணமாக முன்வைக்கப்படுகிறது.

மலேரியாவுக்கு பயன்படுத்தப்பட்ட மருந்துகள், இளம் வயதில் காசநோயைத் தடுப்பதற்காகப் போடப்படும் பிசிஜி தடுப்பூசி ஆகியவற்றுடன் இயற்கையாகவே வைரசுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி மற்றொரு காரணம். பல மாநிலங்களில் மூன்றாம் நிலையில் மருத்துவ வசதிகள் மிகவும் மோசமாக இருந்தாலும், இந்தியாவில் இறப்பு குறைவாகவே உள்ளது. காரணங்கள் எதுவாய் இருப்பினும், கடைசி வரை இது தாக்குப்பிடிக்கும் என்று நம்புகிறோம்.

திட்டங்களை வகுப்புவர்களைப் பொறுத்தவரை, முக்கியமான விசயம் என்னவென்றால், நோய்ப் பரவலும் இறப்பையும் தடுக்க இக்காலக்கட்டத்தில் செய்ய வேண்டியது என்பதுதான். தமிழ்நாடு நிலவரம்நான் மிகவும் நன்றாக அறிந்த மாநிலம் என்பதால், தமிழகத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு இதற்கான விடையை அளிக்க முயற்சி செய்கிறேன்.

அண்மையில் தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10,000-த்தை தாண்டியது. இந்த எண்ணிக்கையின் துல்லியம் குறித்து கேள்வி எழுப்ப முடியும் என்றாலும், மற்ற மாநிலங்களைப் போல் இதுவும் அதிகாரப்பூர்வமான தகவல். தனியாக நாம் கணக்கெடுக்க முடியாது என்பதால் இதை ஏற்றுக் கொண்டாக வேண்டும். மற்ற மாநிலங்களை விட தமிழகம் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறதா, இறப்பு விகிதத்தைக் குறைக்க வேறு ஏதேனும் செய்ய முடியுமா என்பதுதான் கேள்வி.

புள்ளி விவரங்கள் தெளிவாக இல்லாத நிலையில், இலட்சம் பேரிலோ, பத்து இலட்சம் பேரிலோ இறந்தவர்கள் எண்ணிக்கையை எடுத்துக் கொள்வதே பயனளிக்கும் முறையாகும். சில மாநிலங்களில் புள்ளி விவரம் இங்கே தரப்பட்டுள்ளது. மூன்றாம் நிலை மருத்துவ வசதிகள் இருந்த போதும் கூட, தமிழகம் சிறப்பாகச் செயல்படவில்லை என்பதுதான் ஆச்சரியமான விசயம். தேசிய அளவில் இறப்பு விகிதம் இலட்சம் பேருக்கு 7.8 என்ற அளவில் இருக்கையில், தமிழகத்தில் இறப்பு விகிதம் 14 பேராக இருக்கிறது.

கேரளத்தோடு ஒப்பிடும் போது இது மிகவும் அதிகம். ஏனெனில் அங்கு இலட்சத்துக்கு மூன்று பேர்தான் இறந்துள்ளனர். புதிதாக ஏற்படும் இறப்புகளைக் குறைக்க தமிழகம் முயற்சி செய்ய வேண்டும். இரண்டாவது அலை வீசுகையில், நம்பத்தகுந்த தடுப்பூசி எதுவும் இல்லாத நிலையில், இறப்பைக் கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை செய்ய வேண்டிய காலம் வந்திருக்கிறது. சில கருத்துகளை இங்கே முன் வைக்கிறேன்.

பல்வேறு அமைப்புகளுடனும் மிகச் சிறந்த மருத்துவ நிபுணர்களுடனும் சேர்ந்து தமிழக அரசு ஏற்கெனவே சில திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இறப்பைக் கட்டுப்படுத்தும் முறை நோய்த் தொற்றைப் பொறுத்தவரை நாம் பெரும்பாலும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகவே அணுகியிருக்கிறோம். ஆனால் அடிப்படையில் அது ஒரு பொது சுகாதாரம் தொடர்பான விசயம். ஆகவே பொது சுகாதார நிபுணர்களே கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தை முன்னின்று நடத்தவேண்டும்.

நோய்ப் பரவுவதைத் தடுக்கும் முதல் பொறுப்பு மக்களிடமே இருக்கிறது. ஆனால் அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. வழிகாட்டு முறைகளை அவர்கள் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும். மக்களுக்கு அது குறித்த அறிவைப் புகட்ட வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. ஊடகங்கள் மூலமாக தீவிரமான விழிப்புணர்வு பரப்புரையை அரசு நடத்த வேண்டும். மக்களோடு உரையாடுகையில் நான் தெரிந்து கொண்டது என்னவெனில், அவர்களுக்குப் போதுமான தகவல்கள் சென்று சேரவில்லை.

ஊடக விளம்பரங்களுடன், துண்டு பிரசுரங்களை வீடு வீடாக விநியோகிக்க வேண்டும். முகக்கவசம் அணிதல், போதுமான இடைவெளி விட்டு இருத்தல் போன்றவற்றுடன், அடைந்து கிடக்கும் சூழலில் இருக்கும் ஆபத்து குறித்தும் எச்சரிக்க வேண்டும். காலம் கடத்தாமல் மருத்துவ உதவி பெறுவது குறித்து அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் அது குறித்து தனியாக ஒரு ஆய்வை நடத்த வேண்டும்.

கொரோனா 2வது பேரலை நேரும் என எச்சரித்த முன்னாள் IAS: கண்டுகொள்ளாத அரசுகள் - விரிவான கட்டுரை! 

உயிர்களைக் காக்கும் பொறுப்பு அரசுக்குத்தான் உண்டு. அரசுக்கு இது குறித்து தெரியவில்லை என்றோ ஏதும் செய்யவில்லையென்றோ சொல்லவில்லை. ஆனால் இறப்பு விகித்தை குறைப்பதற்கான இலக்கை அரசு நிர்ணயிக்க வேண்டும். மாநில அரசின் சுகாதாரத்துறை ஒருங்கிணைந்து செயல்பட்டால் இதை நிறைவேற்ற முடியும். காய்ச்சலுக்கென மருத்துவ நிபுணர்களால் நடத்தப்படும் உதவி எண்ணை உருவாக்கி, காய்ச்சல் இருப்பதைக் கண்டறியலாம்.

தொலைபேசி மூலம் காய்ச்சல் குறித்து மருத்துவர்கள் மக்களுக்கு வழிகாட்ட முடியும். தனியார் மருத்துவர்களையும் இதில் ஈடுபடுத்த வேண்டும். பெரும்பாலும் எல்லோருமே வாட்ஸ்அப் வைத்திருப்பதால், அதன் மூலம் மருத்துவ சேவைகளை பெற முடியும். காய்ச்சல் ஏற்பட்டால் அதை கையாளும் வகையில் மக்களின் நம்பிக்கையை உயர்த்த முடியும். இந்த முறையில் தகவல் சேகரிக்கும் முறை சிறப்பாகும்.

தேவைப்படும் போதெல்லாம் கொரானோ பரிசோதனை செய்ய மக்களுக்கு வழிகாட்ட முடியும். நோய் உறுதி செய்யப்பட்டால், வீட்டிலோ அல்லது மருத்துவமனையிலோ தனிமைப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை அளிக்கலாம். தொலைத்தொடர்பு வசதி மூலம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நோயாளிக்கு மருத்துவர் ஆலோசனை வழங்க முடியும். ஒரு நோயாளியை மருத்துவமனையில் அனுமதிக்கும் தேவை ஏற்பட்டால், அரசின் கையில் இருக்கும் ஆன்லைன் புள்ளி விவரங்கள் மூலம், தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதிகளை அறிந்து கொள்ளலாம்.

இதில் இணைந்து பணியாற்ற தனியார் மருத்துவமனைகளை அழைக்க வேண்டும். ஆனால் மருத்துவக் கட்டணத்தை அரசு முடிவு செய்வதைத் தவிர்க்க வேணடும். ஆன்லைன் வசதிகள் மக்களைச் சென்றடையும் வகையில் இருக்க வேண்டும். அதே நேரத்தில் புள்ளி விவரங்கள் சரியாக இருக்கும் வகையில் சுகாதாரத்துறை அதை நடத்த வேண்டும். ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஒரு பொது சுகாதாரத்துறை நிபுணரை நியமிக்க வேண்டும்.

பொதுவான தரமான சிகிச்சை வழிகாட்டு முறையை வகுக்க வேண்டியது இன்னொரு முக்கியமான இலக்காகும். உலகம் முழுவதும் இருந்து ஆராய்ச்சி முடிவுகள் குவிந்து கிடப்பதால், இந்த வழிகாட்டு முறைகள் தொடர்ந்து மாற்றப்பட வேண்டும். இதன் மூலம் மருத்துவ நிபுணர்களுக்கு புதிதாக உருவாக்கப்பட்டிரும் சிகிச்சை முறைகள் தெரியவரும்.

நோய்த் தாக்கும் வாய்ப்பு அதிகம் என்பதால், அவர்களைப் பாதுகாக்கும் வகையில் ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு ஆகியவற்றை புதுப்பிப்பதை தாமதப்படுத்தலாம். மிகச் சிறந்த செயல் திட்டத்தை சுமூகமாக நடைமுறைப்படுத்துவது கடினமான காரியம். இதற்காக பல்வேறு நிலைகளில் சிறந்த நிர்வாகிகள் தேவை.

அரசு மருத்துவமனைகளில் கட்டணமின்றியும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தியும் உடனே படுக்கை வசதியை பெறும் நாளும் வந்து விட்டால், அதுவே இறப்பை கட்டுப்படுத்துவதற்கான நல்ல தொடக்கம். அந்நாள் விரைவில் வரும் என்று நம்புவோம். இவ்வாறு அக்கட்டுரையில் பூர்ணலிங்கம் ஐ.ஏ.எஸ். (ஓய்வு) குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories