கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து உயிர் காக்கும் மருந்தாக இருப்பதால் அதை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு கடந்த சனிக்கிழமை தடை விதித்தது. ஆனால், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு மருந்து நிறுவனம் ரெம்டெசிவிர் மருந்தை ஏற்றுமதி செய்ய இருப்பதாக எழுந்த தகவலையடுத்து, மும்பை போலீசார் அந்த மருந்து நிறுவனத்தின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர்.
இந்தத் தகவல் அறிந்த பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ், காவல் நிலையம் சென்று போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அந்த மருந்து நிறுவன உரிமையாளரை விடுவிக்கக் கோரினார். இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டுவிட்டரில் பதிவிட்ட கருத்தில் "இந்த நேரத்தில் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் மக்கள் ரெம்டெசிவிர் மருந்துக்காக அலை பாய்கிறார்கள், தங்களின் அன்புக் குரியவர்களின் உயிரைக் காக்க ஒரு சிறிய குப்பி மருந்துக்காக மக்கள் போராடுகிறார்கள்.
ஆனால், பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒரு மூத்த தலைவர், பொறுப்புள்ள பதவியில் இருப்பவர், ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கியது மனிதநேயத்துக்கு எதிரான குற்றம்" எனச் சாடியுள்ளார். மேலும், பிரியங்காகாந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், மகாராஷ்டிரா பா.ஜ.க. தலைவர்கள் சிலரும், தேவேந்திர பட்னாவிசும் போலீஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்யும் வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.