கொரோனா பரவலின் உச்சத்தில் சிக்கியிருந்த நாடுகளில் ஒன்றாக இருந்த இஸ்ரேல் தற்போது முகக்கவசங்களின் சிறையில் இருந்து விடுபட்டு சுதந்திரமான காற்றை சுவாசிக்கும் நிலையை எட்டியிருக்கிறது.
வெறும் 90 லட்சம் மக்கள் தொகையை கொண்ட சிறிய நாடாக இஸ்ரேல் இருந்தாலும் கொரோனா தொற்றால் கடந்த ஆண்டு முதலே அதிகளவிலான பாதிப்புகளை சந்தித்திருந்தது.
தொடக்கக்காலத்தில் நாளொன்றுக்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்புகளை சந்தித்த இஸ்ரேல் தற்போது ஒட்டுமொத்தமாகவே வெறும் 200க்கும் கீழான தொற்றாளர்களையே கொண்டிருக்கிறது. இவற்றுக்கெல்லாம் தடுப்பூசியே முதன்மையான காரணம் என கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலே கொரோனாவில் இருந்து விடுபட தடுப்பூசியை நாடுவதே சிறப்பான முடிவு என்பதை திண்ணமாக கொண்டு செயல்பட்டது அந்நாட்டு அரசு. அமெரிக்காவின் Pfizer தடுப்பூசியை பயன்பாட்டில் கொண்டுள்ள இஸ்ரேல் 16 வயதுக்கு மேலான அனைவருக்கும் வழங்கி கிட்டத்தட்ட மொத்த மக்கள் தொகையில் 57 சதகிவிதத்தினர் பயனடையும் வகையில் வழி செய்துள்ளது.
இதனையடுத்து மக்கள் பொது இடங்களில் முகக் கவசம் அணிய கட்டாயமில்லை என அறிவித்திருக்கிறது இஸ்ரேல் அரசு. இருப்பினும் எப்போது வேண்டுமானாலும் உருமாறிய கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம் என்ற எச்சரிக்கை உணர்வுடனேயே மக்கள் செயல்பட்டு வருகின்றனர்.
கொரோனா பரவலில் இருந்து முழுமையாக மீண்டுவிடவில்லை என்ற உணர்வுடன் இருக்கும் இஸ்ரேல் அரசு மக்கள் அதிகம் கூடும் இடங்களான கேளிக்கை நிகழ்வுகள், திரையரங்குகள் உள்ளிட்ட உள் அரங்குகளில் மாஸ்க் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டதுடன் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
அதேபோல, மே 23ம் தேதியில் இருந்து வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி அளித்துள்ள இஸ்ரேல் தடுப்பூசி சான்றிதழ் மற்றும் கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் அவசியம் என்றும் கெடுபிடிகளை கையாள்கிறது.
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சிறிய நாடு பெரிய நாடு என்ற பேதமெல்லாம் பார்க்காமல் மக்களின் நல்வாழ்வுக்காக முறையான தடுப்பு நடவடிக்கைகளை கையாண்டு வெற்றி கண்டதற்கு சான்றாக இருக்கிறது சீனாவும் இஸ்ரேலும். ஆகவே எந்த பாகுபாடும் இல்லாமல் நாட்டு மக்கள் அனைவரையும் ஒருசேர காப்பதற்கான வேலைகளில் இந்திய அரசும் இறங்கினால் நிச்சயம் இயல்பு வாழ்வும் திரும்பும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை என சமூக ஆர்வலர்கள், அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.