இந்தியாவில் அதிவேகமாக பரவி வரும் கொரோனா தொற்றில் கணிசமான அளவு மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டுமே உள்ளது. நேற்றைய நிலவரப்படி ஒரே நாளில் 2 லட்சத்து 73 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதில் சுமார் 70 ஆயிரம் பேர் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மராட்டியத்தில் நாசிக், புனே, மும்பை நகரங்களில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவுகிறது. இதையடுத்து ஒவ்வொரு நாளும் புதிய தடுப்பு நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டுள்ளது.
மராட்டியத்தில் இருந்து வெளி மாநிலத் தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் வெளியேறி வரும் நிலையில் புதிதாக பலர் அந்த மாநிலத்துக்கு சென்ற வண்ணம் உள்ளனர். அவர்கள் மூலமாகவும் கொரோனா பரவல் அதிகரிப்பதாக மராட்டிய மாநில அரசு கருதுகிறது.
இதையடுத்து கோவா, கேரளா, டெல்லி, உத்தரகாண்ட், ராஜஸ்தான், குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு மராட்டிய மாநில அரசு புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்து உள்ளது.
மகாராஷ்டிராவுக்குள் நுழையும் போது கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை கண்டிப்பாக கைகளில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
சான்றிதழ் இல்லாமல் வரும் பயணிகளை கைகளில் முத்திரை குத்தி 15 நாட்கள் தனிமையில் வைக்கவும் மராட்டிய மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் சான்றிதழ் இல்லாமல் வரும் பயணிகளுக்கு தலா ரூ.1000 அபராதம் விதிக்கவும் உத்தவிடப்பட்டு உள்ளது.