சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 82 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் . நேற்று (ஏப்.,05) இரவு சுமார் 12.20 மணியளவில் வெண்டிலேட்டர் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
3-4 நிமிடங்கள் வெண்டிலேட்டரில் போதிய ஆக்ஸிஜன் வராததால் இருவர் உயிரிழந்தனர். 50 வயது பெண் மற்றும் 62 வயது ஆண் ஆகிய இருவருமே தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர்.
மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது ஆக்சிஜன் தடைக்கு எந்த வாய்ப்பும் இல்லை. மற்ற பிரச்சினைகள் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்று உண்மையை மறைத்து கூறி வருகிறது.
ஆனால் , மற்றொரு தரப்பில் விசாரித்தபோது மருத்துவமனை ஊழியர் ஆக்சிஜன் சப்ளையை தவறுதலாக நிறுத்தி உள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. இது தொடர்பாக கேட்ட போதும் மருத்துவமனை நிர்வாகம் இதனையும் மறுத்துள்ளது.
கொரோனா தொற்று நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வரும் வேளையில் அரசு பொது மருத்துவமனையில் வெண்டிலேட்டர் கோளாறால் இருவர் உயிரிழந்த விவகாரம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.