Corona Virus

மீண்டும் பரவும் கொரோனா: முன்பு காட்டிய அலட்சியம் இப்போதும் வேண்டாம்; எச்சரிக்கை தேவை - தினகரன் தலையங்கம்!

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவத் தொடங்கியதற்கு ‘எச்சரிக்கை தேவை’ தலைப்பில் தினகரன் நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

மீண்டும் பரவும் கொரோனா: முன்பு காட்டிய அலட்சியம் இப்போதும் வேண்டாம்; எச்சரிக்கை தேவை - தினகரன் தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாட்டில் கடந்த ஓராண்டாக அதிகரித்து வந்த கொரோனா தொற்று, நடப்பு மாதம் சற்று குறைய துவங்கியது ஆறுதலான விஷயமாக இருந்தது. ஆனால், கடந்த ஒரு வாரமாக நிலைமை மாறி, மீண்டும் கொரோனா தொற்று சில மாநிலங்களில் அதிகரிக்க துவங்கியுள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று திடீரென அதிகரித்திருப்பது மத்திய அரசுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் அதிகமாக பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா மாநிலத்தில், இரண்டாவது அலை கொரோனா தொற்று ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது. கேரளாவிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவது பீதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 19ம் தேதி இந்தியாவில் 13,193 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. ஆனால் 20ம்தேதி அந்த எண்ணிக்கை உயர்ந்து 13,993 ஆனது. அன்று முதல் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 4 நாட்களாக 14 ஆயிரத்தை தாண்டி (21ம் தேதி-14,264, 22ம் தேதி-14,199, 23ம் தேதி-14,037) பதிவாகியிருந்தது. நேற்று கொரோனா பாதிப்பு இந்தியாவில் 13,472 ஆக இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த நாட்களை விட அதிகரித்து 104 ஆக பதிவாகியிருந்தது.

இதனால் மீண்டும் கொரோனா பரவுகிறதோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது மத்திய அரசுக்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த இரு தினங்களுக்கு முன்பு இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், உள்துறை செயலாளர் அஜய்பல்லா மற்றும் இத்துறைகளின் உயர் அதிகாரிகளும் இந்த ஆலோசனையில் ஈடுபட்டனர். கொரோனா மீண்டும் பரவாமல் தடுக்கும் நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை துவங்கியுள்ளன.

மீண்டும் பரவும் கொரோனா: முன்பு காட்டிய அலட்சியம் இப்போதும் வேண்டாம்; எச்சரிக்கை தேவை - தினகரன் தலையங்கம்!

நாடு முழுவதும் விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டு, பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் அமராவதியில் கடந்த திங்கட்கிழமை முதல் ஒரு வாரத்திற்கு அம்மாநில அரசு லாக்டவுன் அறிவித்துள்ளது. கேரளாவில் கொரோனா அதிகரித்து வருவதால் பக்கத்து மாநிலமான தமிழகத்தில் உஷார் நிலை அவசியமாக கருதப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தபோது முகக்கவசம், தனிமனித இடைவெளி ஆகியவை கடைபிடிக்கப்பட்டு சுகாதாரத்துறையால் கண்காணிக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அது கடைபிடிக்கப்படுகிறதா? என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மக்களும் கொரோனா முற்றிலும் களையெடுக்கப் பட்டுவிட்டது என்ற எண்ணத்தில் முகக்கவசம் இன்றியும், தனிமனித இடைவெளியை மறந்தும் அஜாக்கிரதையாக உலா வருகிறார்கள். ஆனால் தினமும் சராசரியாக தமிழகத்தில் 400க்கும் மேற்பட்டவர்கள் புதிதாக கொரோனா பாதிப்புக்குள்ளாகிறார்கள். எனவே மத்திய-மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்கவேண்டும். ஆரம்பத்தில், கொரோனா தடுப்பு விஷயத்தில், மத்திய-மாநில அரசுகள் கோட்டைவிட்டது போல இனியும் நடக்காமல் விழித்துக் கொள்வது நல்லது. ஏனெனில், இன்னொரு பொருளாதார வீழ்ச்சியை நம்மால் தாங்கவும், சமாளிக்கவும் இயலாது.

எனவே, தடுப்பு நடவடிக்கையில் எவ்வித சமரசத்துக்கும் இடமின்றி, உறுதியுடன் செயல்படவேண்டும். அரசின் தடுப்பு நடவடிக்கைக்கு ஏற்ப, மக்களும் விழிப்புடன் இருந்தால், கொரோனா மீண்டும் பரவாமல் தடுக்க முடியும்.

banner

Related Stories

Related Stories